லிந்துலை பாமஸ்டன் கொலனியில் குடிநீருக்காக மக்கள் வீதியை மறித்து ஆர்பாட்டம் !

IMG_3880_Fotorக.கிஷாந்தன்

 

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை பாமஸ்டன் கொலனியில் 300 இற்கு மேற்பட்ட மக்கள் 09.03.2016 அன்று காலை 09 மணிக்கு அட்டன் நுவரெலியா பிரதான வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பாமஸ்டன் சந்தியில் இவ்வாறு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

IMG_3883_Fotor

உலக வங்கியின் ஊடாக லிந்துலை மற்றும் நானுஓயா பொலிஸ் கட்டுப்பாட்டு பிரிவுக்குள்ள பாமஸ்டன் கிராம பகுதி மக்களுக்கு கடந்த 20 வருடங்களுக்கு மேலாக குடிநீர் தட்டுப்பாட்டு பிரச்சினை நிலவி வந்துள்ளது. இது தொடர்பாக கடந்த அரசாங்க காலப்பகுதியிலும் புதிய அரசாங்கத்திலும் உள்ள இப்பகுதி அரசியல்வாதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு குடிநீரை வழங்கும் படி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

 

கடிதம் மூலமாகவும் வாய் மூலமாகவும் முன்வைக்கபட்ட கோரிக்கைகளுக்கு இணங்க மத்திய மாகாண நீர்வழங்கல் அதிகார சபையின் ஊடாக உலக வங்கியில் நிதியினை பெற்று நீர் வழங்கல் திட்டம் ஒன்றை செய்வதாக உறுதிகள் கூறப்பட்டுள்ளது.

 

இருந்தும் கடந்த இரண்டு வருடங்களாகியும் இவர்களுக்கான குடிநீர் திட்டம் முறையாக ஆரம்பிக்கப்படவில்லை. அதேவேளை 200 மில்லியன் ரூபா உலக வங்கியின் நிதியினை கொண்டு கடந்த ஜனவரி மாதம் 2016 அன்று ஆரம்பிக்கப்பட இருந்த இந்த குடிநீர் வேலைத்திட்டம் நுவரெலியா மாவட்டத்தில் ஹங்குராங்கெத்த மற்றும் வலப்பனை பிரதேசங்களுக்கு முன்னெடுத்து செல்லப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பொது மக்கள் தெரிவித்தனர்.

 

உடனடியாக எமக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை கொண்டு குடிநீரை பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

இது தொடர்பாக ஸ்தலத்திற்கு விரைந்த நுவரெலியா பிரதேச செயலக பிரதி செயலாளர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருடன் பொது மக்கள் மற்றும் இந்த பொது மக்களை வழிநடத்தும் பாமஸ்டன் விகாரையின் பௌத்த பிக்கு ஆகியோர் தங்களின் குறைபாடுகளை முன்வைத்தனர்.

 

இதற்கு இணங்க நானுஓயா குளிர் ஓடை (ஐஸ் பீலி) பகுதியிலிருந்து தற்காலிகமாக குடிநீர் தருவதற்கு திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் இதற்காக கால அவகாசம் வேண்டும் எனவும் ஸ்தலத்திற்கு விரைந்த அதிகாரிகள் அறிவித்ததனை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தினால் சுமார் 1 மணி நேரம் அவ்வழியினூடான போக்குவரத்து பாதிப்படைந்திருந்தமை குறிப்பிடதக்கது.