உடனடியாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட வேண்டும். மக்கள் பலம் இல்லாத அரசாங்கம் ஆட்சியில் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற் றும் மஹிந்த சந்திப்பு வெறும் கண்துடைப்பே ஆகும். மக்களை ஏமாற்றவே இந்த களியாட்டமெல்லாம் செய்வதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நூறு நாட்கள் முடிவடைந்தவுடன் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்ற வாக்குறுதியை அரசாங்கம் வழங்கியது. ஆனால் இன்று நூறு நாட்கள் கடந்தும் தேசிய அரசாங்கம் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு நாம் எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம். மக்களின் ஆதரவு இல்லாத அரசாங்கமே இன்று ஆட்சி நடத்துகின்றது.
ரணில் விக்கரமசிங்கவிற்கு அரசாங்கத்தை நடத்தும் அதிகாரம் மக்களால் வழங்கப்படவில்லை. அதேபோல் கூட்டணி அரசாங்கத்தை மக்கள் விரும்பவும் இல்லை.ஆனால் இவர்கள் பாராளுமன்றத்தை கலைக்காது தொடந்தும் தேசிய அரசாங்கத்தை கொண்டு செல்லவே முயற்சிக்கின்றனர். அதேபோல் பாராளுமன்றத்தை கலைக்காது இருக்கவே இப்போது 20 ஆவது திருத்தச் சட்டத்தையும் முன்வைக்கின்றனர். 2௦ஆவது திருத்தும் நிறைவேற்றப்படபோவதில்லை .ஆகவே நிறைவேற்றப்படாத சட்டமூலத்தை காரணம் காட்டி பாராளுமன்றத்தை நீடிக்க ஜனாதிபதி உள்ளிட்ட தேசிய அரசாங்கம் திட்டம் தீட்டி வருகின்றது. இதற்கு நாம் ஒருபோது இட்டமளிக்க மாட்டோம்.
இப்போது இருப்பது ஜனநாயகத்துக்கு எதிரான அரசாங்கம். மக்கள் ஆட்சியை மதிக்காத அரசாங்கம். எனவே இந்த அரசாங்கம் உடனடியாக கலைக்கப்பட வேண்டும் . உடனடியாக பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும். அதேபோல் எதிர்க்கட்சி யார் என்பதையும் விரைவில் தீர்மானிக்க வேண்டும். பலமான ஆளும் கட்சியோ சரியான எதிர்க்கட்சியோ இல்லாத ஒரு பாராளுமன்றம் இப்போது செயற்பட்டுக்கொண்டு உள்ளது. அதை தடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை.
ரணிலுக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை
மேலும் இந்த அமர்வுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். உடனடியாக பொதுத்தேர்தலை நடத்தி யார் அரசாங்கம் என்பதை தெரிவு செய்ய வேண்டும். இல்லையேல் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை கொண்டுவந்து நிறைவேற்றுவோம். அதேபோல் பாராளுமன்றத்தை கலைக்ககோரி போராடவும் தயாராக உள்ளோம்.
மைத்திரிபால மகிந்த சந்திப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சந்திப்பு மக்களை ஏமாற்றும் வெறும் கண்துடைப்பு மட்டுமே. ஊடகங்களின் மூலம் மக்களை ஏமாற்றவே இவர்கள் முயற்சிக்கின்றனர். உண்மையிலேயே ஜனாதிபதி மற்றும் மஹிந்த சந்திப்பின் நோக்கம் வேறு ஆனால் சந்திப்பு குறித்த காரணத்தை பிரதானப்படுத்தி நடக்கவில்லை. இவ்வாறானதொரு சந்தர்ப்பதில் கட்சியை பலப்படுத்தி எமது அரசாங்கத்தை கொண்டுவரும் நோக்கம் கட்சியில் யாருக்கும் இல்லை என்பது தெளிவாக தெரிகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பலர் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தை பலப்படுத்தவே விரும்புகின்றனர். ஆகவே இவர்களை நம்பி கலத்தில் இறங்குவது சாத்தியமற்றதே. கட்சிக்குள் பனிப்போர் நிலவும் நிலையில் இரு தலைவர்களையும் பிரிக்கும் நோக்கத்திலேயே இச் சந்திப்பு நடந்துள்ளது என்பதே எனது கருத்து எனவும் தெரிவித்தார்.