மஹிந்த கோடிக்கணக்கில் கடன் பெற்றிருந்தால், பிரதமர் விசேட அறிக்கை வெளியிட வேண்டும் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோடிக்கணக்கில் பணத்தை கடனாக பெற்றுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறுவாரேயானால், பிரதமர் இது குறித்து விசேட அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
bandula

அத்துடன் ஏனைய விசாரணைகளை விட இந்த விடயம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் எனவும் பந்துல குணவர்தன கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

மத்திய வங்கியின் புள்ளிவிபரங்களுக்கு மறைத்து எப்படி அந்த பணம் பெறப்பட்டது என்பதை வெளியிட வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் குறித்து அரசாங்கம் சர்வதேசத்திற்கு பொய்யுரைத்துள்ளது.

எமது அரசாங்கத்தின் ஆட்சியில் 8.2 வீதமாக இருந்த அந்நிய செலாவணி கையிருப்பு 5.3 வீதமாக குறைந்துள்ளது. வரிகள் அதிகரிக்கப்படுவதால், முதலீட்டாளர்கள் இலங்கையில் இருந்து வெளியேறுகின்றனர்.

667 வர்த்தகர்கள் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைத்து விசாரிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய அரச சேவையில் ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட்டுள்ளது. பசளை மானியம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன் ஓய்வூதியம் குறைக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக நல்லாட்சி அரசாங்கம் மற்றுமொரு வரவு செலவுத் திட்டத்தை கொண்டு வர தயாராகி வருகிறது எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, கடந்த வெள்ளிக்கிழமை அவசரமாக கூடிய அமைச்சரவை வரி அறவீடுகளில் திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளது.

எனினும் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு காரணமாக அந்த திட்டத்தை அமுல்படுத்தலில் இருந்து பின்வாங்கியுள்ளனர். தற்போது அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.