எம்.வை.அமீர்
தற்போது நாட்டில் பேசுபொருளாகவுள்ள புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான விடயத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிகக் காத்திரமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. சிலரால் கூறப்படுவது போன்று மௌனம்காக்கவில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் நீர் விநியோக வடிகாலமைப்பு அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கல்முனை மாநகரசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழுவின் தலைவருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸின் தலைமையில் இடம்பெற்ற இடைக்கால மத்திய குழுவின் விசேட கூட்டம் சாய்ந்தமருது ஹெல்த் சென்டரில் 2016-03-05 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், முன்னாள் பாராளமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஷபீக் ரஜாப்தீன் மற்றும் கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் உள்ளிட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய றவூப் ஹக்கீம், புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் பல்வேறு உயர்மட்டக்குழுக்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் இதில் மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களின் யோசனைகளை உள்ளடக்கியவாறு ஆவணங்களும் தயார்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் தேசிய மாநாடு தொடர்பில் கருத்துவெளியிட்ட அமைச்சர், பாலமுனையில் மிகவிமர்சையாக இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துகொள்ளவுள்ளதாகவும், முஸ்லிம் காங்கிரஸின் அபிமானிகள் அனைவரும் அணியணியாக வந்து கலந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கல்முனை நகர அபிவிருத்தி தொடர்பாக கூறும்போது இப்பிராந்திய மக்களுக்கு வாக்களித்தவாறு கல்முனை அபிவிருத்திசெய்யப்படும் என்றும், அதற்க்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், கல்முனை நகர அபிவிருத்தியின் ஆரம்பகட்ட பணிகள் சாய்ந்தமருதில் இருந்தே ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
குறித்த கல்முனை நகர அபிவிருத்தி பணிகளை செயட்படுத்துவதற்காக கல்முனையில் விரைவில் அலுவலகம் ஒன்றை திறக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இங்கு உரையாற்றிய விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களைக் கூறிக்கொண்டு இனவாத சிந்தனையுடன் தற்காலிகமாக அம்பாறைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கிளையை, தற்காலிகமாக சாய்ந்தமருது ஹெல்த் சென்டரில் நிறுவவுள்ளதாகவும் பின்னர் வோலிவோரியன் பகுதியில் நிரந்தர நிர்வாக கட்டிடத்தொகுதியில் அது நிறுவப்படும் என்றும், கல்முனை நகர அபிவிருத்தி பணிகள் அவசரமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அதற்கான பூர்வாங்க திட்டங்கள் தயார்படுத்தப்படுவதாகவும் இதற்கு வெளிநாட்டு நிபுணர்களின் உதவிகளும் பெறப்படுவதாகவும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது தோணா மற்றும் அஷ்ரப் ஞாபகார்த்த சிறுவர் பூங்கா மற்றும் படகுத்துறைமுகம் என்பனவும் மிக நவீன முறையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்த பிரதி அமைச்சர் ஹரீஸ், பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் சாய்ந்தமருது மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்திருப்பதையிட்டு மிகுந்த நன்றியுடனும் மனமகிழ்வுடனும் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மீது கழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர், சில உள்ளூர் ஏஜண்டுகளிடமும் வெளிநாட்டவர்களிடமும் பெரும்தொகையைப் பெற்றுக்கொண்டு இக் கட்சியை அழிக்க முற்படுவதாகவும் அவர்களது கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றும் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் படையணி ஒன்றைத்திரட்டி வருவதாகவும் குறித்த இளைஞர்களுக்கு எதிர்காலத்தை தலைமைதாங்கி செல்லக்கூடிய அளவுக்கு அறிவுசார்ந்த பயிற்சிகளை வழங்கவுள்ளதாகவும் இந்த இளைஞர் படையணி தலைவரின் நேரடி கட்டுப்பாட்டில் செயற்படும் என்றும் தெரிவித்தார்.