அகதி சிறுவன் அய்லான் மரணத்துக்கு காரணமான 2 சிரியா கடத்தல்காரர்களுக்கு ஜெயில்: துருக்கி கோர்ட் உத்தரவு

26

உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சிரியாவில் இருந்து உயிர் பிழைக்க ஏராளமான மக்கள் அகதிகளாக புறப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர். அவர்கள் சட்ட விரோதமாக அனுமதி இல்லாத படகுகளில் உயிரை பணயம் வைத்து அங்கிருந்து தப்பி வருகின்றனர்.

அவ்வாறு வரும் படகுகள் நடுக்கடலில் மூழ்குவதால் அகதிகள் உயிரிழக்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிரியாவில் இருந்து வந்த அகதிகள் படகு துருக்கியில் கடலில் மூழ்கியது.

இந்த விபத்தில் பலர் உயிரிழந்தனர். அவர்களில் அய்லான் குர்தி என்ற 3 வயது சிறுவனின் உடல் துருக்கி கடற்கரையில் ஒதுங்கியது. அவனது முகம் கடல் மணலில் புதைந்த நிலையில் ஊடகங்களில் புகைப்படம் வெளியானது.

இது உலக மக்களின் மனதை உலுக்கியது. அதுவே ஐரோப்பிய நாடுகளில் அகதிகள் அடைக்கலம் பெற வழிவகை செய்தது. அளவுக்கு மீறி ஆட்களை ஏற்றி வந்ததால் தான் படகு மூழ்கியது விசாரணையில் தெரிய வந்தது.

எனவே, சிரியாவில் இருந்து சிறுவன் அய்லான் குர்தி உள்ளிட்டோரை கடத்தி வந்ததாக முவாபகா அலபாஷ் (36). அஐசம் ஆப்ரலிரகாட் (35) ஆகிய 2 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டனர்.

சிறுவன் அய்லான் உள்ளிட்டோர் சாவுக்கு இவர்கள்தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது. இறுதியில் அவர்கள் இருவருக்கும் தலா 4 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.