5 மாநில தேர்தல் கருத்து கணிப்பு: அ.தி.மு.க. 116 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு!

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம், புதுவை ஆகிய 5 மாநில சட்டசபைக்கு தேர்தல் தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பு தமிழ்நாடு, கேரளா, அசாம் மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்களின் வெற்றி வாய்ப்பு குறித்து இந்தியா டி.வி.க்காக சி.ஓட்டர்ஸ் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது.

அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தமிழகத்தில் தி.மு.க.வை விட அ.தி.மு.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். என்றாலும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அ.தி.மு.க. 116 தொகுதிகளிலும் தி.மு.க. 101 தொகுதிகளிலும் வெற்றி பெறும். மற்ற கட்சிகளுக்கு 18 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தற்போதைய சட்டசபையில் அ.தி.மு.க.வின் பலம் 150 ஆகவும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 203 ஆகவும் உள்ளது. தி.மு.க.வின் பலம் 23 ஆகவும் கூட்டணி கட்சிகளுடன் 31 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற மாநிலங்கள் தொடர்பான கருத்து கணிப்பு முடிவு வருமாறு:–

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியை இழக்கும். அங்கு இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெறும்.

கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் இடது சாரி கூட்டணிக்கு 89 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 49 இடங்களும் கிடைக்கும். பா.ஜனதா கூட்டணிக்கு ஒரு இடம் மட்டுமே கிடைக்கும்.

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் அசாமில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று முதலிடம் பிடிக்கும். என்றாலும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காது. காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும்.

(அசாமில் பா.ஜனதா– அசாம் கனபரிஷத் கூட்டணி ஏற்படுவதற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்து கணிப்பு என்பதால் அங்கு பா.ஜனதா கூட்டணி வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது)

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு குறைந்து வந்தாலும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும். 294 தொகுதிகளைக்கொண்ட அந்த மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 156 இடங்களில் வெற்றி பெறும் (தற்போது 184 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்)

மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணிக்கு 114 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும். (தற்போது 60 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்)

இவ்வாறு கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.