இரட்டையர் பிரிவில் சாதிப்பதன் ரகசியம் பற்றி சானியா பேட்டி!

Sania-Mirza

கோவையில் நேற்று நடந்த மாரத்தான் ஓட்டப்பந்தய பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பின்னர் நிருபர்களிடம் கூறும் போது, ‘இந்தியாவில் டென்னிஸ் இரட்டையர் பிரிவை பொறுத்தவரை களத்தில் கண் ஜாடைகளும், கைஅசைவுகளும் தான் எங்களுக்கு மிகவும் கைகொடுக்கிறது. 

இந்த யுக்தி முறையே இரட்டையர் பிரிவில் இந்தியர்கள் சாதிப்பதற்கு முக்கிய காரணம். நானும், மார்ட்டினா ங்கிசும் இணைந்து கடைசி மூன்று கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பட்டங்களை வென்றோம். ஆனால் பிரெஞ்ச் ஓபன் அனேகமாக மிக கடினமாக இருக்கும். அதை வெல்ல கடுமையாக போராடுவோம்’ என்றார்.

மேலும் சானியா கூறுகையில், ‘பெண்கள் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும். அதற்கு உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். இதனால் ஆண்டுக்கு ஒருமுறையாவது மாரத்தான் போன்ற ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டும். ஆண்களுக்கு நிகராக பெண்கள் எல்லா துறையிலும் முன்னேறி வருகிறார்கள். 

எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை பெண்களுக்கு இருக்க வேண்டும்’ என்றார். சானியா மிர்சா அடுத்ததாக அமெரிக்காவில் நடக்கும் இண்டியன்வெல்ஸ் போட்டியில் பங்கேற்க இருக்கிறார்.