உத்தேச அரசியலமைப்பு: ‘வாளாவிருக்கும்’ முஸ்லிம் அரசியல்

Rauff-Hakeem-e1450285454534_Fotor_Collage_Fotor

பெரிய கூட்டுக் குடும்பம் ஒன்றின் தலைவன் சந்தைக்குப் போவதற்கு தயாராகின்றான். அப்போது உங்களுக்கு என்னென்ன பொருட்கள் தேவை என்று எல்லோரையும் பார்த்து அவர் கேட்கின்றார். ஒவ்வொருவராக பட்டியல் கொடுகின்றனர். சிலருக்கு தட்டுமுட்டுச் சாமான்களும், சிலருக்கு பலசரக்கு பொருட்களும் தேவைப்படுகின்றன. சிலருக்கு அழகுசாதன பொருட்களும் வேறு சிலருக்கு அலங்கார திரவியங்களும் அவசியமாக இருக்கின்றன. எல்லோருடைய பட்டியலையும் எடுத்துக் கொண்டு சந்தைக்குப் போன குடும்பத் தலைவன், அனைத்துப் பொருட்களையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்புகின்றார். அப்போது குடும்பத்தின் இளைய மருமகள் தலையில் அடித்துக் கொண்டு ஓடி வந்து… ‘ஐயோ மாமா மறந்து விட்டேஸ் கேஸ் சிலிண்டரில் கேஸ் முடிந்து விட்டது. அதையும் வாங்க வேண்டும்’ என்று சொன்னால், அவருக்கு எப்படியிருக்கும்.
அவர் என்ன சொல்வார்? ‘ஏன் இதை அப்படியே மறந்து விட்டீர்கள்? எல்லோருக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டதுதானே, எனவே சொல்லியிருக்கலாமே. இப்போது ஒன்றும் செய்ய முடியாது. கையில் காசும் தீர்ந்து விட்டது. மூத்த மருமகளின் பொருட்களில் ஏதாவது உங்களுக்கு பயன்படும் என்றால், அவரது அனுமதியுடன் கேட்டுப் பெற்றுங்கள். தவறை நீங்கள் செய்துவிட்டு, என்னிடம் வந்து முறையிடக் கூடாது’ என்று சொல்வார் உரத்த குரலில்.

 

இலங்கையில் அரசியலமைப்பை ஒட்டுமொத்தமாக மீள உருவாக்கும் முயற்சியில் அரசாங்கம் களமிறங்கியிருக்கின்றது. இதற்காக மக்களின் கருத்தறிவதற்கு கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால், இவ்வாறான சந்தர்ப்பத்தை எல்லாம் முஸ்லிம் அரசியல்வாதிகளும் மக்களும் கணக்கெடுக்காது விட்டுவிட்டு, எல்லாம் நடந்து முடிந்த பிற்பாடு, ஐயோ அதை கேட்க மறந்து விட்டோம், இதை நீங்கள் தரவேண்டும் என்று சொல்வார்களே என்றால், மேலுள்ள கதையில் வரும் மாமனாரை காட்டிலும் அரசாங்கமும் சர்வதேசமும் முஸ்லிம்கள் மீது கோபம் கொள்ளும். அதில் வரும் இளைய மருமகளை காட்டிலும் அதிகமான விடயங்களுடன் அனுசரித்துப் போக வேண்டிய நிலை, இரண்டாவது சிறுபான்மை இனமாகிய முஸ்லிம்களுக்கு நிச்சயமாக ஏற்படும் என்பதை தூக்க கலக்கத்திலும் மறந்துவிடக் கூடாது.

பிழைதிருத்த முயற்சி

நல்லாட்சி ஏற்பட்டதன் பின்விளைவான மாற்றங்கள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குதல், இனப் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம், தேர்தல் முறைமை மாற்றம், சமஷ்டி, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைப்பு, தனி முஸ்லிம் மாகாணம் போன்ற விடயங்கள் இதில் குறிப்பிடத்தக்கவை ஆகும். இவை ஒவ்வொரு விடயத்திலும் அதீத கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது. ஆனபோதும், சிறிய விடயங்கள் தொடர்பாக விழிப்படைந்து, அது பற்றி ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கே நீண்டகாலத்தை எடுத்துக் கொள்ளும் முஸ்லிம் மக்களும் அவர்களுடைய அரசியலும், சமகாலத்தில் பல விடயங்களை கையாள்வதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கின்றன.

 

மேற்குறிப்பிட்ட பல வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கின்றது என்றாலும், உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பே அவற்றுக்கு எல்லாம் அடிப்படையாக அமையப் போகின்றது என்பது மிகவும் கவனத்திற்குரியது. அரசியலமைப்பு ஒன்று அமுலுக்கு வருமாக இருந்தால், அதன் பிரகாரமே இனப் பிரச்சினைக்கான தீர்வு திட்டம் வரையப்படப் போகின்றது. தீர்வுத்திட்டம் எப்படியானது என்பதைப் பொறுத்தே அது சமஷ்டியா, வடக்கு கிழக்கை இணைப்பதா என்று நிர்ணயம் செய்யப்படும். வடக்கு, கிழக்கு இணைப்பதா இல்லையா என்ற தீர்மானத்தின் அடிப்படையிலேயே முஸ்லிம் மாகாண தொடர்பான அழுத்தம் வலுப் பெறப்போகின்றது. அதேபோல், உத்தேச அரசியலமைப்பு பரிந்துரை செய்கின்ற முறையின் அடிப்படையிலேயே தேர்தலும் அதன் வழிவந்த முஸ்லிம் அரசியலின் எதிர்காலமும் அமையப் போகின்றது. இப்படியே ஒரு சங்கிலித் தொடராக இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இலங்கையில் சுதந்திரத்திற்கு முன்னர் அதாவது 1947ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சோல்பரி அரசியல்யாப்பு வரைக்கும் 6 அரசியலமைப்பு அல்லது அரசியல் சீர்திருத்தங்கள் இடம்பெற்றிருக்கின்றன. 1972 இல் இருந்து ஆறு வருடங்களுக்கு 1ஆம் குடியரசு யாப்பு அமுலில் இருந்தது. 1978ஆம் ஆண்டின் 2ஆம் குடியரசு அரசியலமைப்பே இன்றுவரை நம்மை ஆளுகின்றது. இது கூட 19 தடவைகள் திருத்தப்பட்டிருக்கின்றது. ஆதலால், பல தசாப்தங்கள் பழமைவாய்ந்த ஒரு பொறிமுறையான இந்த அரசியலமைப்பை மீண்டும் மீண்டும் திருத்தி பாவிக்காமல் புதிதாக ஒரு பொறிமுறையை உருவாக்குவதற்கு அரசாங்கம் நினைக்கின்றது. அதாவது, நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள எல்லாப் பிரச்சினைகளையும் முடியுமானவரை தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. அல்லது அவ்வாறான ஒரு தோற்றப்பாட்டை காண்பிக்கின்றது.

 

இவ்விடத்தில் ஒரு அனுமானம் இருக்கின்றது. அது என்னவென்றால், சர்வதேசத்தின் மேற்பார்வையின் கீழ், தமிழ், முஸ்லிம் பிரதான கட்சிகளின் ஒப்புதலுடன் நல்லாட்சி அரசாங்கமானது ஒரு மாதிரி அரசியலமைப்பை முன்னமே வடிவமைத்து விட்டது என்பதுதான் அந்த அனுமானமாகும். அதாவது, எப்படியான அரசியலமைப்பு ஒன்று வடிவமைக்கப்பட வேண்டுமென்ற தீர்மானத்திற்கு அரசாங்கம் ஓரளவுக்கு வந்துவிட்டது. அது உண்மையென்றால், மக்களின் பிரச்சினைகளை அரசாங்கம் காலகாலமாக ஆராய்;ந்து அறிந்து வைத்திருக்கின்றது. எப்படியான அரசியல் யாப்பு பொருத்தம் என்பதையும் உத்தேசித்திருக்கின்றது என்பதே அதன் அர்த்தமாகும். ஆனால், பொதுவாக மக்கள் தரப்பில் இருந்து அல்லது சிறுபான்மை கட்சிகளிடமிருந்து ஏதாவது மிக முக்கியமான வேண்டுகோள்கள், பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டால் அது குறித்து பரிசீலிப்பதற்கும் தேவை ஏற்படின் அரசியலமைப்பு ஊடாக அதற்கு சட்டவலு கொடுப்பதற்கும் நல்லாட்சி பின்னிற்கப் போவதில்லை என்பது வெள்ளிடைமலை.

மக்கள் கருத்தறிதல்

அதன் காரணமாகவே மக்களிடம் கருத்தறியும் பணிகளை அரசாங்கம் மேற்கொண்டது. பெப்ரவரி 29ஆம் திகதியுடன் இதற்கான கால அவகாசம் முடிவடைந்திருந்த போதிலும் தவிர்க்க முடியாத காரணங்களால் தவறவிட்டவர்கள் தமது கருத்துக்களை கொழும்பிற்கு வந்து முன்வைப்பதற்கு 3,4 ஆம் திகதிகள் மேலதிகமாக வழங்கப்பட்டிருந்தன. ஆனால், முஸ்லிம் சமூகத்தின் சார்பில் எத்தனை பொது மக்கள், சமூக பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள், நலன்விரும்பிகள், படித்தவர்கள் தமது கருத்துக்களை இந்த கருத்தறியும் குழுவுக்கு முன்வைத்தார்கள் என்று எண்ணிப் பார்த்தால், வெட்கி தலைகுனிய வேண்டிய நிலையே ஏற்படும்.
புதிய அரசியலமைப்பு தொடர்பாக வெகுஜன கருத்தறியும் நடவடிக்கைகள் நடைபெற்ற வேளையில் சில நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அதேபோல் காத்தான்குடியில் கூடிய சிவில் அமைப்புகள் ஒரு கலந்துரையாடலை நடாத்தி அக்கோரிக்கைகளை ஆவணமாக்கி முன்வைத்துள்ளது. அதேபோல் அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனமும் சில முன்மொழிவுகளை அரசியலமைப்பு குழுவுக்கு சமர்ப்பித்திருக்கின்றது. இவ்வாறு மேலும் பல சிவில் அமைப்புக்களும் இது தொடர்பான ஆரோக்கியமான சந்திப்புக்களை நடாத்தி இருக்கின்றது. இது மிகவும் பாராட்டப்பட வேண்டியது. இங்கு ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டும்.

 

அதாவது, முஸ்லிம் சமூகத்திற்குள் இருக்கின்ற வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட படித்த மட்டத்தினரில் ஒரு தொகுதியினரும் அரசியலமைப்பு மறுசீராக்கம் பற்றி அக்கறை செலுத்தியதை அவதானிக்க முடிந்தது. இது மிகவும் நல்லதொரு சமிக்கையே. ஆனாலும், இந்நிலைமை மேலும் முன்னேற்றம் காண வேண்டும். தமது பட்டப்படிப்புக்களின் தகுதியை சீதனத்தினால் அளவிட நினைக்கும் படித்த வர்க்கமும், சமூக சிந்தனையாளன் என்று கூறிக் கொண்டு பொன்னாடைகளுக்காக அலைந்து திரிவும் பேர்வழிகளும் தமது சமூகம் பற்றிய சிந்தனை வட்டத்திற்குள் வர வேண்டும். அரசியல்வாதிகளே எல்லாவற்றையும் செய்வார்கள் என்று படித்தவர்களும் நம்பிக் கொண்டிருப்பார்கள் என்றால், படித்தவர்கள் என்ற சொற்பதம் பொய்யாகிப் போகும்.
முஸ்லிம் அரசியல் தலைமைகளின் வாழாவிருக்கும் போக்கை இந்த விடயத்திலும் அவதானிக்க முடிந்தது. முஸ்லிம்களின் தலைவர்கள் தாமே என்றும் தமது கட்சிகளே தேசிய கட்சிகள் என்றும் நிஜமான தோற்றத்தை உருப் பெருப்பித்துக் காட்ட நினைக்கின்ற முஸ்லிம் தலைமைகள் இதில் பாரிய சமூகத் துரோகத்தை இழைத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, அரசியலமைப்பின் தார்ப்பரியம் பற்றி அடிமட்ட, சாமனிய முஸ்லிம்களுக்கு பெரிதாக எந்த அபிப்பிராயங்களும் இல்லை. மக்களின் இந்த அறியாமையை நிவர்த்தி செய்வதற்கு முஸ்லிம் காங்கிரஸோ, மக்கள் காங்கிரஸோ அவ்வாறில்லாவிடின் தேசிய காங்கிரஸோ நாடுதழுவிய வேலைத்திட்டம் எதனையும் இன்று வரை ஆரம்பிக்கவில்லை.

 

பொது மக்களை தெளிவுபடுத்த வேண்டுமென்ற எந்த உந்துதலும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இல்லை. நடுத்தர மற்றும் அடிமட்ட மக்களுக்கு போதிய தெளிவு கிடைப்பதை அவர்கள் பெரிதாக விரும்பவும் மாட்டார்கள். மக்களை முட்டாளாக்கி முட்டாளாக்கி அரசியல் செய்யும் அவர்களது நகர்வுகள் எதிர்காலத்திலும் வெற்றியடைய வேண்டுமென்றால் மக்கள் தெளிவற்றவர்களாக இருந்து விட்டுப் போகட்டும் என்றே அவர்கள் நினைப்பார்கள். இந்த விடயத்தின் தார்ப்பரியம் தெரிந்து விட்டால், அதற்காக மக்கள் குரரெழுப்ப தொடங்கி விட்டால், என்றாவது ஒருநாள் நமக்கு எதிராகவும் மக்களின்ன குரல்கள் ஒலிக்கும் என்றும் சில முஸ்லிம் அரசியல் ஞானிகள் நினைத்திருக்கக் கூடும்.

 

முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றுமே செய்யாதிருக்கின்ற ஒரு காலப்பகுதியில் கூட முஸ்லிம் புத்திஜீவிகயும் சமூக ஆர்வலர்களும் இத்தனை கருத்தரங்குகளை நடாத்தி இருக்கின்றார்கள் என்றால், அவர்களுக்கு அரசியல் பக்கத்துணையை வழங்கினால் இந்த முயற்சி எவ்வளவு பலம்பெற்றிருக்கும்!

 

ஆனால் முஸ்லிம் அரசியல் கட்சிகள் மக்களின் விருப்பப்படி செயற்படுகின்றவை அல்ல. தமக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொண்டு தம்முடைய புத்திக்கு சரியென படுவதையே மக்களுடைய நிலைப்பாடும் என்று பிரதிவிம்பப்படுத்தவே அவர்கள் பிரயத்தனப்படுகின்றனர். எனவே, தமது சிந்தனை எல்லைகளுக்கு அப்பால், தம்மைவிட தூரநோக்கோடு மக்கள் சிந்திப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒரு நிறுவனத்தில் முட்டாளான மேலதிகாரியின் கீழ் புத்திசாலியான ஊழியன் ஒருவன் வேலை செய்வதை ஒருக்காலும் மேலதிகாரி விரும்பவே மாட்டான். அதுபோலத்தான் இதுவும்.

நமது தலைமைகள்

 

ஆரம்பத்தில் சொல்லப்பட்டவாறான பல முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அடிப்படை தத்துவங்களை, கொள்கைகளை, சீர்திருத்தப்படும் அரசியலமைப்பு கொண்டிருக்கப் போகின்றது. அந்த வகையில், இலங்கையில் வாழும் முஸ்லிம்களை இது குறித்து விழிப்படையச் செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கின்றது. முஸ்லிம்களின் உரிமைக்காகவே ஆரம்பிக்கப்பட்ட தாய் கட்சி என்ற அடிப்படையில் இப் பொறுப்பிலிருந்து அது விடுபட்டிருக்க முடியாது. ஆனால், தாருஸ்ஸலாத்தில் மார்க்க சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்தது போல, பாலமுனையில் தேசிய மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தது போல ஒவ்வொரு ஊருக்கும் சென்று புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிப்பதற்கும் அவர்களின் பின்னூட்டல்களை பெற்றுக் கொள்வதற்கும் ஹக்கீம் வேலைத்திட்டங்கள் எதையும் முன்னெடுக்கவில்லை.
இதற்கு மூலகாரணம் அரசியல்பற்றிய அவரது ஆள்மன நிலைப்பாடாகும். சிங்கள தேசத்தின் ஆட்சியாளர்களுக்கு நோகாமலும் தமிழ் அரசியல்வாதிகள் புறக்கணிக்காத விதத்திலுமான கோரிக்கைகளை, அழுத்தங்களையே ஹக்கீம் முன்வைப்பார் என்பது அக்கட்சியிலுள்ள பலரது அபிப்பிராயமாகும். குpழக்கில் மக்களின் தலைவனாக இருந்து கொண்டு, கண்டியில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக போட்டியிடும் சமநிலையை அவர் குழப்பிக் கொள்ள மாட்டார் என்றே கருத முடிகின்றது.

 

மறுபுறத்தில் மக்கள் காங்கிரஸ் கட்சி, மு.கா.வின் மீது பழியைப் போட்டுவிட்டு தப்பித்துவிட முடியாது. ஏனெனில் புதிய கட்சி என்றாலும் மு.கா.வுக்கும் ம.கா.வுக்கும் இடையிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் வித்தியாசம் 1 மட்டுமே ஆகும். றிசாட்டின் துணிச்சல் அண்மைக்காலமாக பாராட்டப்பட்டு வருகின்றது. இந்த சமூகத்திற்கான குரலாகவாவது அவர் இருக்கின்றார் என்பது ஆறுதலானதே. ஆனால், வட மாகாண மக்களின் மீள் குடியேற்றம் என்ற விவகாரத்திற்குள்ளேயே அவர் இன்னும் உழன்று கொண்டிருக்கின்றார். அதைச்சொல்லிச் சொல்லியே மற்றைய பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு நேரமில்லை என்ற நிலைப்பாட்டை கட்டமைக்கின்றாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

 

ஆகக் குறைந்தது, தமது கட்சியின் வளர்ச்சியை மேலோங்கச் செய்வதற்காகவாவது மக்களை தெளிவுபடுத்தும் பணியை றிசாட் முன்னெடுத்திருக்கலாம். ஆனால், உத்தேச அரசியலமைப்பானது கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தின் அளவுக்கு, தாம் சார்ந்த வடபுல, மன்னார் மக்களில் தாக்கம் செலுத்தாது என்று அவர் கருதி. ஒருவித ஒத்திசைந்த போக்கை கடைப்பிடிக்கின்றாரோ தெரியவில்லை. ஆனால், ஹக்கீமின் விசிறிகளுக்கு ஹக்கீமை புகழ்வதற்கும் றிசாட்டின் விசிறிகளுக்கு அவரை புகழ்பாடுவதற்கும், இவ்விரு தரப்பினரும் ஆளுக்காள் வசைபாடுவதற்கும் போதியளவு நேரமிருக்கின்றது.

 

இங்கு இன்னுமொருவர் கவனத்திற் கொள்ளப்படத்தக்கவர். அவர் தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லா. இவ்விடயத்தில் இவர் கவனம் செலுத்தியாக வேண்டும் என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதாவுல்லா கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோற்றுப் போனார். ஆல்லது மஹிந்த அவரை மறைமுகமாக தோற்கடித்தார்.

 

அன்றிலிருந்து அதாவுல்லா, தேசிய அரசியலில் ஒருவித அஞ்சாவாசத்தை கடைப்பிடித்து வருகின்றார். தேசிய அரசியலில் மட்டுமன்றி பிராந்திய அரசியலிலும் அவர் விலகியே இருக்கின்றார். தனது சொந்த ஊhர் மக்களை சந்திப்பதற்கு கூட அவர் இரண்டொரு தடவைதான் சென்று வந்திருக்கின்றார். ஆனால், ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். அதாவுல்லா, கிழக்கின் அரசியலில் மிக முக்கியமானவர். 20 வருடங்களுக்கு மேலாக அரசியல் செய்து வருபவர். இதில் 16 வருடங்கள் எம்.பி.யாக இருந்திருக்கின்றார். 10 வருடங்கள் அமைச்சுப் பதவிகளை வகித்திருக்கின்றார். இப்போது தோற்றுவிட்டார் என்பதற்காக, அவர் முற்றாக அரசியலை விட்டு ஒதுங்கி வேறு வியாபாரத்தில் இறங்கி விட்டார் என்று அர்த்தமில்லையே.

 

நாளை ஒரு தேர்தல் நடைபெற்றால் அதாவுல்லா நிச்சயம் களத்திற்கு வருவார். வுhக்குக் கேட்பார். இறைவனின் நாட்டமிருந்தால் அவர் மீண்டும் பாராளுமன்றத்திற்கு செல்லலாம். அப்படி நடைபெற்றால் புதிய அரசியலமைப்பின் அடிப்படையிலேயே அவருடைய அரசியலும் தீர்மானிக்கப்படும் என்பதை மறந்து விடக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஹக்கீமும் றிசாட்டும் கிழக்கில் பிறந்தவர்கள் அல்ல. ஆனால் தேர்தலில் போட்டியிட்ட அனுபவங்களோடு பெயரளவிலேனும் ஒரு அரசியல் கட்சியை வைத்துக் கொண்டிருக்கின்ற கிழக்கில் பிறந்த ஒருவர் என்றால் அது அதாவுல்லாதான். ஆகவே, ஊரோடு கோபித்துக் கொண்டு எதிர்காலத்தை கெடுத்துக் கொள்ளக் கூடாது.

 

அதாவுல்லா சில விடயங்களில் தைரியமானவர் என்ற கருத்து இருக்கின்றது. குறிப்பாக புலிகளுக்கு எதிராக பேசுவதற்கு எல்லோரும் பின்வாங்கிய காலத்தில் பகிரங்கமாக பேசினார். வடகிழக்கு மாகாணம் இரு மாகாணங்களாக பிரிக்கப்பட வேண்டுமென வெளிப்படையாக கூறினார். அது உண்மைதான். ஆனால் அதற்காக கிழக்கை பிரித்தது அதாவுல்லாதான் என்று கூறுவது மிகைப்படுத்தப்பட்ட சொல்லாடலாகும். சும்மாந்துறையைச் சேர்ந்த ஒருவரின் பெயரில் ஜே.வி.பி. தாக்கல் செய்த மனுவே, வடகிழக்கு மாகாணம் இரண்டாகப் பிரிபடுவதற்கு வழிவகுத்தது என்பதை மறந்து விடக் கூடாது.

 

ஆனால், இவ்வாறு புலிகளுக்கு எதிராக தைரியமாகப் பேசிய அதாவுல்லா, இனவாத சக்திகளுக்கு எதிராக பேச முடியாத அளவுக்கு ஆகிப்போனது எவ்வாறு என்பது பிற்கால ரகசியமாகும். இப்போதும் அதேபோன்றதொரு போக்கை கடைப்பிடிக்கக் கூடாது என்பது மக்களின் விருப்பாகும். புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்களை தெளிவூட்டி நியாயமான காத்திரமான கோரிக்கைளை சமர்ப்பிக்க வேண்டும். அவருடைய அரசியல் மீளெழுச்சிக்கும் அது வித்திடலாம். ஆதை விட்டுவிட்டு, ‘அதாவுல்லா பேச வேண்டிய இடத்தில் பேசிக் கொண்டுதான் இருக்கின்றான்…’ என்று கூறிக்கூறிய கோட்டையும் கோட்டையையும் கைவிட்டது போல, இதையும் விட்டு விடக் கூடாது,

 

ஆக மொத்தத்தில், புதிய அரசியலமைப்பு நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் பொதுவான அபிலாஷைகளுக்கான திறவுகோலாக இருக்கப் போகின்றது. மலையக மக்களும், தமிழர்களும், வேடுவர்களும் கூட கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றனர். இந்நிலையில் வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களினதும் அதற்கு வெளியேயுள்ள முஸ்லிம் மக்களினதும் பிரச்சினைகளுக்கு தீர்வு கொண்டு வரும் விதத்தில் அதனை வடிவமைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அப்படியென்றால், உங்களுக்கு என்ன தேவை என்ற பட்டியலை சமர்ப்பிக்க வேண்டிய கடப்பாடு ஹக்கீம், றிசாட், அதாவுல்லாவுக்கு மட்டுமன்றி எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் உள்ளது.

பிற்குறிப்பு, இக்கட்டுரை சுரணையுள்ளவர்களுக்கு மட்டுமானது.

• ஏ.எல்.நிப்றாஸ்

(வீரகேசரி 05.03.2016)

• அரசியலமைப்பு ஒன்று அமுலுக்கு வருமாக இருந்தால், அதன் பிரகாரமே இனப் பிரச்சினைக்கான தீர்வு திட்டம் வரையப்படப் போகின்றது. தீர்வுத்திட்டம் எப்படியானது என்பதைப் பொறுத்தே அது சமஷ்டியா, வடக்கு கிழக்கை இணைப்பதா என்று நிர்ணயம் செய்யப்படும். வடக்கு, கிழக்கு இணைப்பதா இல்லையா என்ற தீர்மானத்தின் அடிப்படையிலேயே முஸ்லிம் மாகாண தொடர்பான அழுத்தம் வலுப் பெறப்போகின்றது.