இலங்கை அணியின் தொடர் தோல்விகள் அணியின் செயல்பாட்டை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று டி20 அணித்தலைவர் மலிங்கா கூறியுள்ளார்.
இலங்கை டி20 அணியின் தலைவர் மலிங்கா காயத்தால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார். இருப்பினும் ஆசியக்கிண்ண தொடரில் எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி சிறப்பாக செயல்பட்டார்.
ஆனால் அதன் பின்னர் நடந்த இந்தியா, வங்கதேச அணிகளுக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. இதனால் அந்த 2 போட்டிகளிலுமே தோல்வியடைந்த இலங்கை தொடரை விட்டு வெளியேறியது.
இது பற்றி இலங்கை டி20 அணியின் தலைவர் மலிங்கா கூறுகையில், இலங்கை அணியில் அனுபவமற்ற வீரர்கள் இருக்கின்றனர். இது போன்ற பெரிய போட்டிகளுக்கு அனுபவம் என்பது முக்கியமானது.
ஆனால் அதேசமயம் எங்களிடம் திறமையான இளம் வீரர்கள் உள்ளனர். இன்னும் சில வருடங்களில் வலுவான ஒரு அணி அமையும்.
2012ம் ஆண்டு ஆசியக்கிண்ணப் போட்டியில் நாங்கள் 2-3 போட்டிகளில் தோற்று வெளியேறினோம். ஆனால் 2014ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கிண்ண தொடரில் அதே இடத்தில் கிண்ணம் வென்று அசத்தினோம்.
கடந்த சில ஆண்டுகளாகவே நாங்கள் சிறந்த நிலையில் இருக்கிறோம். அதனால் 2-3 தோல்விகள் அணியின் செயல்பாட்டை பாதிக்காது. டி20 உலகக்கிண்ணப் போட்டிகளில் கண்டிப்பாக அசத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.