தோட்டத்தொழிலாளர்களது நாட்சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட ஜனாதிபதி, பிரதமர், தொழில் அமைச்சர் ஆகியோர் உடனடியாக தலையீட வேண்டும் என ஜே.வி.பியின் மத்தியசெயற்குழு உறுப்பினரும் முன்னால் எம்பியுமான கே.டீ.லால்காந்த தெரிவித்தார்.
04.03.2016 அன்று அட்டனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இங்கு தெரிவிக்கையில்…
கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக கடந்த 3 வருடங்களுக்கு முன்னரே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த ஒப்பந்தம் காலாவதியாகி ஒருவருடமும் ஆகின்றது. தொடர்ச்சியாக கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள தொழிற்சங்கங்கள், இதில் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும், முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்துள்ளன. எனினும் அரசாங்கம் இதில் தலையிடுவதில்லை.
எனவே இந்த விவகாரத்தில் அரசாங்கம் தலையிட்டு தீர்வை வழங்கவேண்டும். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் நிலவிய வாழ்க்கைச் செலவை மதிப்பிட்டே அப்போது சம்பள உயர்வு வழங்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் நாட்சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கும்படி தோட்டத் தொழிலாளர்களால் கோரிக்கை தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இந்தக் கோரிக்கையின் பிரகாரம் 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க விருப்பம் இல்லாத காரணத்தினால்தான் என்னவோ ஒப்பந்தக் கைச்சாத்து இழுத்தடிக்கப்பட்டுவருகின்றது.அரசாங்கத்துடன் தொடர்புபட்ட தோட்டத்தொழிலாளர்களின் வாக்குகளிளால் தெரிவாகி இன்று அமைச்சராக பதவிவகிப்போரும் இந்த விவகாரத்தில் தலையிட மறுக்கின்றார்கள்.
தொழிற்சங்கங்கள் என்னும், தொழிலாளர்களின் பிரதிநிதிகள் என்றும் கூறிக்கொள்ளும் அமைச்சர்கள் தங்களது வரப்பிரசாதங்களை அனுபவித்து தொழிலாளர்களை மறந்து இருக்கின்றனர்.எனவே தொழிற்சாலைகளுக்கு முன்னால் நின்று போரட்டங்களில் ஈடுபடும் நிலைக்கு தோட்டத்தொழிலாளர்கள் இன்று தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.