க.கிஷாந்தன்
அட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பின்தங்கிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் வலய மட்ட மேற்பார்வைகள் உரிய வகையில் இடம் பெறாதது குறித்து மத்திய மாகாண முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வரவுள்ளதாக மத்திய மாகாண கல்வியமைச்சின் கண்காணிப்பு உறுப்பினரான சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
அட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட கினிகத்தேனை பிளக்வோட்டர் தமிழ் பாடசாலைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டதன் பின்பே இந்தக்கருத்தினை அவர் வெளியிட்டுள்ளார்.
தரம் 5 வரையுள்ள பிளக்வோட்டர் பாடசாலையில் 46 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவர்களுக்கு அதிபர் மற்றும் 4 ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர்.
இந்தப்பாடசாலைக்கு வகுப்பறை வசதிகள் , குடிநீர்வசதிகள் உட்பட பல வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இந்தப்பாடசாலையின் அதிபர் விடுதி வெளியார் ஒருவரால் ஆக்கிமிக்கப்பட்டுள்ளது. இந்தப்பாடசாலையின் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கை குறித்து கடந்த ஒருவருட காலத்துக்கும் மேலாக அட்டன் கல்விப்பணிமனையிலிருந்து எந்தவொரு மேற்பார்வை குழுவும் வருகை தரவில்லை என்பதை அறியக்கூடியதாக உள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்விடயம் குறித்து அட்டன் வலயக்கல்விப்பணிப்பாளரின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ள அதே வேளை பின்தங்கிய பாடசாலைகளில் வலய மட்ட மேற்பார்வைகளை உரிய வகையில் மேற்கொள்ளுமாறு மத்திய மாகாண முதலமைச்சரின் கவனத்துக் கொண்டு வரவுள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் மேலும் தெரிவித்துள்ளார்.