சலீம் றமீஸ்
அம்பாரை மாவட்ட தமிழ், முஸ்லிம் தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் கோரிக்கை தொடர்பாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக தெரிவிப்பது நியாயமில்லாத விடயமாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன துறை முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை அமர்வின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.றஸாக் அவர்களினால் முன்வைக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் நீண்ட காலமாக தொண்டர் ஆசிரியராக கடமையாற்றி வருகின்ற ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்க வேண்டுமென்ற தனி நபர் பிரேரனையின் போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அங்கு உரையாற்றுகையில்….
அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக எந்தவிதமான சம்பளமும் இல்லாமல் பாடசாலைகளில் தமிழ், முஸ்லிம் தொண்டர் ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்தனர்.
இவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் 2001,2005,2006,2007,2009ம் வருடங்களில் அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகங்களில் நேர்முகப்பரீட்சைகள் இடம் பெற்றன.
இந் நேர்முகப்பரீட்சைகளில் தோற்றிய சிங்கள மொழி தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன. ஆனால் தமிழ், முஸ்லிம் தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவில்லை. இதனால்தான் தமிழ், முஸ்லிம் தொண்டர் ஆசிரியர்கள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் தொடர்பான கோரிக்கையினை முன்வைக்கவில்லை என்ற யதார்த்தங்களை ஏனையவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் வௌ;வேறு காரணங்களுக்காக சில பிரதேசங்களில் பெரும்பான்மை தொண்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் நியமனங்கள் வழங்குங்கள் எங்களுக்கு எந்தவிதமான பிரச்சினையுமில்லை.
உண்மைக்குண்மையாக தொண்டர்களாக கடமை புரிந்தவர்களை இனங்கண்டு இவர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்க கிழக்கு மாகாண சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.நிரந்தர நியமனங்களை கோரி நீண்ட காலமாக போராட்டங்களை நடாத்தி வரும் தொண்டர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
வட மாகாணத்திலும் தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனங்கள் தொடர்பாக பல போராட்டங்கள் நடைபெற்று தற்போது மத்திய கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு இவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிகின்றோம்.
எனவே, கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களும் மத்திய கல்வி அமைச்சுடன் தொடர்பு கொண்டு கிழக்கு மாகாண கல்வி அமைச்சரும், முதலமைச்சரும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.