கைது செய்வதற்காக 16 சந்தேகநபர்களின் பட்டியலை குற்றப்புலனாய்வுப் பிரிவு தயாரித்துள்ளது !

ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலைக்குப் பொறுப்பானவர்கள் என்று சந்தேகிக்கப்படும், 16 சந்தேகநபர்களின் பட்டியலை குற்றப்புலனாய்வுப் பிரிவு தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
thajudeen

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள், பரிசோதனைகளின் அடிப்படையில், வசீம் தாஜுதீன் விபத்தில் மரணமாகவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று கருதுவதாக தெரிவித்திருந்த கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம், சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்தக் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 16 பேரின் பட்டியலை குற்றப்புலனாய்வுப் பிரிவு தயாரித்துள்ளது. இவர்கள் சூழ்நிலைச் சாட்சியங்களின் அடிப்படையில், கைது செய்யப்படவுள்ளனர்.

அந்தக் காலகட்டத்தில் பதவியில் இருந்து காவல்துறை அதிகாரிகள் பலரும் கைது செய்யப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர்கள் சாட்சியங்களை மறைத்து, விசாரணைகளைத் திசை திருப்பியுள்ளனர் என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

அதேவேளை, முதற்கட்டமாக முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் அனுர சேனநாயக்க கைது செய்யப்படவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்குத் தொடர்பான ஆவணங்கள் காணாமற்போனமைக்கு இவரே பொறுப்பாக இருந்துள்ளார் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் தலைமையக பரிசோதகர்களாக இருக்கும் மூன்று காவல்துறை அதிகாரிகளையும் கைது செய்யும் நோக்கில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை நடந்த போது இவர்களில் இருவர் கிருலப்பனை மற்றும் நாரஹேன்பிட்டிய காவல்துறைப் பிரிவுகளில் பணியாற்றியிருந்தனர்.