செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு அட்டன் நீதிமன்றம் பிடியாணை !

க.கிஷாந்தன்

 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் சிசேஷ்ட உப தலைவரும், ஊவா மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமானுக்கு எதிராக அட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் 01.03.2016 அன்று செவ்வாய்க்கிழமை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

73270-02-photo

 

கடந்த 2014ஆம் ஆண்டு மொழிகள் மற்றும் நல்லிணக்க பிரதி அமைச்சராக கடமையாற்றிய அமைச்சர் பழனி திகாம்பரத்தின் வாகனத்தை அட்டன் – கினிகத்தேனை பகுதியில் வழிமறித்து இடையூறு விளைவித்தமை தொடர்பாக செந்தில் தொண்டமானுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாட்டை ஏற்ற அட்டன் பொலிஸார் அட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இதில் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உட்பட ஊவா மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எம்.ராம், எஸ்.சக்திவேல், எம்.ரமேஸ், எம்.உதயகுமார் ஆகியோரும் இந்த முறைப்பாட்டில் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதன்படி இது தொடர்பான வழக்கு விசாரணை 01.03.2016 அன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றபோது அமைச்சர் செந்தில் தொண்டமான் சுகயீனம் காரணமாக நீதிமன்றில் சமூகமளிக்கவில்லை என்று அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி எஸ்.ராம்மூர்த்தி தெரிவித்ததோடு, அதற்கான மருத்துவ அறிக்கையையும் சமர்ப்பித்தார்.

எனினும் அந்த மருத்துவ அறிக்கையை நிராகரித்த அட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதவான் பிரசாத் லியனகே, இந்த வழக்கு விசாரணைகளின் போது செந்தில் தொண்டமான் முன்னிலையாக தவறியதால் அவரை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு பிடியாணையை பிறப்பித்தார்.

இதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதிவரை இந்த வழக்கு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.