நம்பிக்கையில்லா பிரேரணை !

z_p15-Education

 நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

 இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பந்துல எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் 90க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவித்த அவர், பிரேரணை முடிவுறும் தருவாயில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

 உள்நாட்டு வர்த்தக ரீதியில் அமெரிக்க வர்த்தகர் ராஜ் ராஜரத்தினத்துடன் தொடர்பு வைத்திருந்தமை, நிதிச்சந்தையை தவறாக வழிநடத்தியமை, அரசாங்க பிணை முறி ஏலத்தினூடாக பரிமாற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை நடத்தமுன் அவரை நியமித்தமை போன்ற பல குற்றச்சாட்டுகள் குறித்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

 நம்பிக்கையில்லா பிரேரணையை வாக்கெடுப்புக்கு விட முன்னர் மூன்று நாட்கள் விவாதம் நடத்த சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக பந்துல எம்.பி. மேலும் தெரிவித்தார்.