இலங்கையில் 22,254 தமிழ் பௌத்தர்களும் , தமிழ் பிக்குகளும் உள்ளனர் : புத்தசாசன அமைச்சு !

இலங்கையில் 22,254 தமிழ் பெளத்தர்கள் உள்ளனர். இவர்களில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 470 தமிழ் பெளத்தர்களும் அடங்குகின்றனர் என புத்தசாசன அமைச்சு தெரிவித்தது.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வாய்மூல கேள்விக்கான விடையளிக்கும் நேரத்தின்போது ஐ.தே.கட்சி.எம்.பி. புத்திக பத்திரணவின் கேள்விக்கு சமர்ப்பிக்கப்பட்ட பதிலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

buddist thero

புத்தசாசன அமைச்சின் பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

குடிசன மதிப்பீட்டுத் திணைக்கத்தினால் 2012ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பிற்கு அமைய 22,254 தமிழ் பெளத்தர்கள் உள்ளனர்.

மேற்கூறப்பட்ட கணக்கெடுப்பிற்கு அமைய வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் பெளத்தர்களின் எண்ணிக்கை 470 ஆகும். 

அதேவேளை இலங்கையில் தமிழ் பிக்குகளும் உள்ளனர். பெளத்த மத அலுவல்கள் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ள தகவல்களுக்கமைய தமிழ் பிக்குகளின் எண்ணிக்கை 11 ஆகும்.

யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் பெளத்தர்களுக்கு சகல வசதிகளையும் அரசு செய்து கொடுத்துள்ளது. 

யாழ்ப்பாணத்தில் ஸ்ரீநந்தர ராம எனும் பெயரில் தமிழ் மொழியில் கற்பிக்கும் பெளத்த அறநெறிப் பாடசாலையொன்று ஆரம்பிக்கப்பட்டு 2013.01.07ம் திகதி பெளத்த மத அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கு சுமார் 80 தமிழ் மக்கள் கல்வி பயில்கின்றார்கள். எனினும் இயங்குவதற்கு நிலையான இடமொன்று இல்லாமையினால் தற்போது இது செயலிழந்து காணப்படுகின்றது. 

நிலையான இடமொன்று கண்டறியப்பட்டு மீண்டும் தமிழ் மொழியிலான பெளத்த அறநெறிப் பாடசாலை தொடர்ந்தும் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.