ஆசியக் கிண்ணம் : வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா !

இருபது ஓவர் ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.

CRICKET-ASIACUP-BAN-IND

167 ஓட்டங்கள் என்ற இந்திய அணியின் வலுவான இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம், இந்தியாவின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் திணறியது.

இதனால் அடுத்தடுத்து தனது விக்கெட்களை சீரான இடைவெளியில் இழந்து வந்தது. இதன் காரணமாக 10 ஓவர்கள் முடிவில் 50 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து அந்த அணி தத்தளித்தது.

அந்த அணித் தரப்பில் சபீர் மட்டும் 32 பந்துகளில் 44 ஓட்டங்கள் குவித்தார். மற்றவர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.

வங்கதேசம் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 121 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

CRICKET-ASIACUP-BAN-INDia

இந்திய தரப்பில் அதிகப்பட்சமாக நெஹ்ரா 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டநாயகனாக 83 ஓட்டங்கள் குவித்த ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக  நாணயசுழற்சியில் வென்ற வங்கதேச அணி பந்து வீச முடிவு செய்தது. வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய தொடக்க ஆட்டகாரர்கள் ரோகித் மற்றும் தவானை ஓட்டங்கள் எடுக்க விடாமல் தடுமாற வைத்தார்கள்.

இருவரும் ஆரம்ப கட்ட ஓவர்களில் வேகமாக ஒட்டங்கள் குவிக்க முடியாமல் திணறினார்கள். தவான் 2 ஓட்டங்கள் எடுத்திருந்த போது அல்-அமீன் பந்தில் கிளீன் போல்ட் ஆனார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய கோஹ்லியும் (8), ரெய்னாவும்(13) சொற்ப ஒட்டங்களில் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் ரோகித் சர்மா வங்கதேச பந்து வீச்சை நாலாபுறமும் விரட்டி அடித்தார்.

யுவராஜ் சிங் 16 பந்துகளில் 15 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து கேட்ச் ஆனார். இதனை அடுத்து பாண்டியா களமிறங்கினார். இதன் பிறகு இந்தியாவின் ரன் ரேட் ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கியது. ரோகித் – பாண்டியா ஜோடி 18 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்து அசத்தியது.

கடைசி பந்தை சந்தித்த டோனி சிக்ஸ் அடிக்க, இந்தியா 20 ஓவரில் 166 ஓட்டங்கள் குவித்தது. ரோகித் சர்மா 55 பந்துகளில் 83 ஓட்டங்களும், பாண்டியா 18 பந்துகளில் 31 ஓட்டங்களும் குவித்தனர். வங்கதேசம் தரப்பில் அல்-அமீன் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.