பசில் ராஜபக்ச, கோதாபய ராஜபக்ச ஆகிய தனது சகோதரர்களையும், புதல்வர்களையும் இணைத்துக் கொண்டு புதிய கட்சியொன்றை மஹிந்த ராஜபக்ச தொடங்கப் போகின்றாரென்ற செய்தி கடந்த வாரம் ஊடகங்களில் பரபரப்பாக வெளியாகிக் கொண்டிருந்தது.
புதிய கட்சியைத் தொடங்கப் போவதற்கான அறிவிப்பை ராஜபக்ச சகோதரர்கள் தங்களது ஆதரவாளர்கள் மத்தியில் அவ்வப்போது வெளிப்படுத்தியும் இருந்தனர்.
ஆனாலும் புதிய கட்சி விரைவில் தொடங்கப்படுமென்பதற்கான ஏற்பாடுகளை ராஜபக்ச தரப்பினுள் காண முடியாதிருக்கிறது.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் போன்றவற்றில் கிடைத்த தோல்விகளுக்குப் பின்னர் தனது அரசியல் நடவடிக்கைகளுக்காக அபேராம விகாரையைப் பயன்படுத்தி வந்த மஹிந்த ராஜபக்ச, சமீபத்தில் தனது அரசியல் பணிகளை பத்தரமுல்லையில் உள்ள அலுவலகமொன்றுக்கு இடமாற்றியிருந்தார்.
எனினும் நேற்று வெளியான தகவலொன்றின் படி, மஹிந்த ராஜபக்ச தனது புதிய கட்சிக்குரிய பணிகளுக்காக எதிர்வரும் 29ம் திகதியன்று தனியான காரியாலயமொன்றைத் திறக்கப் போவதாகத் தெரிய வந்துள்ளது.
இருந்த போதிலும் புதிய கட்சியைத் தொடங்குவது தொடர்பான வேறெந்த ஏற்பாடுகளும் இடம்பெறுவதாகத் தகவல்கள் இல்லை.
மஹிந்த ராஜபக்ச சமீப தினங்களாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீதான தனது பற்றுதலை மிக அதிகமாகவே வெளிப்படுத்தி வருகிறார். அமரர் பண்டாரநாயக்கவின் கொள்கைகள் மீது மிகுந்த பற்றுதல் கொண்ட ஒருவரெனவும் தன்னை இனங்காட்டி வருகிறார்.
சுதந்திரக் கட்சி பிளவுபடுவதற்குப் பொறுப்பாளியாக தன்னை எவரும் குற்றம் சாட்ட முடியாதெனவும் மஹிந்த கூறி வருகிறார்.
அவரது இவ்வாறான கூற்றுகள்தான் புதிய கட்சி தொடங்கப்படுவதில் இன்னமும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.
சுதந்திரக் கட்சியை விட்டு முற்றாக அகன்று விடுவதற்கு மஹிந்த அஞ்சுவதும் தயங்குவதும் தெரிகிறது. அதேசமயம் புதிய கட்சியொன்றைத் தொடங்குவதில் அவர் தாமதிப்பதும் தயங்குவதும் தெரிகின்றது. இவையெல்லாம் அரசியல் ஆய்வுக்குரிய விடயங்கள்.
முன்னைய ஆட்சிக் காலத்தின் போது நிலவிய வரம்பு மீறிய ஊழல் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் ராஜபக்ச குடும்பத்தினரை சுற்றி வளைத்திருக்கும் இத்தருணத்தில், சுதந்திரக் கட்சியை விட்டு முற்றாக நீங்குவதும், புதிய கட்சியைத் தொடங்குவதும் எந்தளவு அனுகூலங்களைத் தருமென்பதில் மஹிந்த இன்னுமே தெளிவான முடிவுக்கு வர முடியாதவராக உள்ளாரென்பதையே இன்றைய நிலைமைகள் உணர்த்துகின்றன.
அதேசமயம் மஹிந்த ராஜபக்ச புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க வேண்டுமென்பதில் சு.கவில் உள்ள மஹிந்த ஆதரவு அணியினர் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை.
சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தைக் கொண்டிருக்காத தினேஷ் குணவர்தன, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ஸ போன்றோரே மஹிந்தவை சுதந்திரக் கட்சியிலிருந்து அகற்றி புதிய கட்சியொன்றுக்குள் தள்ளுகின்ற முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறான மந்தமான ஆதரவுத்தளத்தை நம்பி மஹிந்த ராஜபக்ச புதிய கட்சியொன்றில் இறங்குவதில் ஆபத்தும் இல்லாமலில்லை.
தென்னிலங்கை பெரும்பான்மை சமூகத்தைப் பொறுத்த வரை மஹிந்த ராஜபக்ச புதிய கட்சியொன்றை ஆரம்பிப்பது குறித்து இருவேறு விதமான அபிப்பிராயங்கள் நிலவி வருகின்றன.
சிறுபான்மை இனங்களை நசுக்க வேண்டுமானால் மஹிந்த ராஜபக்ச புதிய கட்சியொன்றைத் தொடங்குவது அவசியமானதென பேரினவாத சிந்தனை கொண்டோர் கருதுகின்றனர்.
அதேவேளை, முன்னைய ஆட்சியில் ஊழல் மோசடியில் ஈடுபட்டோரைப் பாதுகாக்கவே புதிய கட்சி தொடங்கப்படப் போவதாக மற்றைய தரப்பினர் கருதுகின்றனர்.
பெரும்பான்மை மக்கள் மத்தியில் நிலவுகின்ற இவ்வாறான இருவேறு கருத்துகளுக்கிடையே சிக்கிக் கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ச, எத்தகைய தீர்மானத்துக்கு வரப் போகிறாரென்பது இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.
இவ்வாறான குழப்ப நிலைமைக்கு மத்தியில் ஐ.தே.க. மீதான கண்டனங்கள் அவரிடமிருந்து இப்போது தீவிரமாக வெளிப்படத் தொடங்கியுள்ளன. சு.க. பிளவுபட்டதற்கு ஐ.தே.கவே பொறுப்பென மஹிந்த குற்றம்சாட்டி வருகிறார்.
அவரது பத்து வருட ஆட்சிக் காலத்தின் போது ஐ.தே.கவைப் பலவீனப்படுத்துவதில் அவர் எவ்வாறான வழிவகைகளைக் கையாண்டாரென்பதை இவ்வேளையில் மீட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது.
கடந்த கால அரசியலில் மஹிந்த பிரயோகித்த ஆயுதங்களே இன்று அவருக்கு எதிராகத் திரும்பியிருக்கின்றன.