மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பையின் தனி நபர் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம் !

சலீம் றமீஸ்

 

 

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மொழிப் பாடசாலைகளில் இரண்டாவது மொழியான சிங்களப் பாடத்தினை மாணவர்கள் கற்றுக் கொள்வதற்கான சிங்கள நூல்கள் வருடா வருடம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. சிங்களப் பாடத்திற்கான தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதனால் தமிழ் மொழிப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் வருடா வருடம் வழங்கப்பட்டு வரும் சிங்கள மொழி நூல்களை பயன்படுத்த முடியாத நிலை தோண்றியுள்ளது.

 

uthumaan

 எனவே, நமது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நல்ல சூழ்நிலையில் கிழக்கு மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் சிங்கள மொழிக்கான தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிப்பதற்கும், சிங்களப் பாடசாலைகளில் தமிழ் மொழிப் பாடம் கற்பிப்பதற்காக தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிப்பதற்கும் நடவடிக்கைகளை கிழக்கு மாகாண சபை மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபை அமர்வு இன்று தவிசாளர் திரு.கலப்பதி தலைமையில நடைபெற்ற போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரனையில் குறிப்பிட்டார்.

 
தொடர்ந்து உரையாற்றுகையில்…
அன்று நாங்கள் பாடசாலையில் கல்வி கற்கும் காலத்தில் ஆரம்ப வகுப்பில் இருந்தே சிங்கள மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு சிங்கள மொழி தொடர்பான பாடம் கற்பிக்கப்பட்டது. பின்னர் நமது நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ் நிலை காரணமாக தமிழ் மொழிப் பாடசாலைகளில் சிங்கள மொழிப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாமல் இடை நிறுத்தப்பட்டது. இலங்கை அரசியலமைப்பில் தேசிய மற்றும் நிர்வாக மொழிகளாகத் தமிழ் மொழியும், சிங்கள மொழியுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நமது நாட்டில் வாழும் சகல இன மக்களும் அவரவர் தாய் மொழியில் தொடர்பு கொள்ளவும், தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் சட்டப்படியான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த காலங்களில் தமிழ் மொழியை பயன்படுத்துவதில் பல தடைகள் ஏற்பட்டன.

 

நமது நாட்டில் பெரும்பான்மை மக்களுக்கும், தமிழ் மக்களுக்குமிடையில் ஏற்பட்ட வேறுபாட்டிற்கும், பிரச்சினைக்கும் காரணமாக இருந்தது மொழிப் பிரச்சினைகள்தான் என்பதனை நாம் அனுபவரீதியாக அறிந்துள்ளோம். தமிழ், முஸ்லிம் மக்கள் சிங்கள மொழியினையும், சிங்கள மக்கள் தமிழ் மொழியினையும் கற்றுக் கொண்டால் பல பிரச்சினைகளுக்கு நாம் தீர்வுகளைப் பெறலாம்.

 
தமிழ் மொழிப் பாடசாலைகளில் சிங்கள மொழிக்கான ஆசிரியர்களை நியமிப்பதுடன், சிங்கள மொழிப் பாடசாலைகளில் தமிழ் மொழி ஆசிரியர்களையும் நியமிப்பதற்கான அவசர ஏற்பாடுகளை கிழக்கு மாகாண சபை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக அதிமேதகு ஜனாதிபதி, மத்திய அரசாங்க கல்வி அமைச்சர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு கிழக்கு மாகாண சபையும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு கிழக்கு மாகாண தமிழ் மொழி பாடசாலைகளில் சிங்கள பாடம் கற்பிப்பதற்கு வெற்றிடமாக உள்ள 472 ஆசிரியர்களை நியமிப்பதற்கும், கிழக்கு மாகாண சிங்கள மொழி பாடசாலைகளில் தமிழ் பாடம் கற்பிப்பதற்கு வெற்றிடமாக உள்ள 78 தமிழ் மொழி ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கும் கிழக்கு மாகாண சபையில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.