ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் பீல்ட் மார்ஷலுடன் கலந்துரையாட ஏற்பாடு !

maithiri fonseka
ஜேர்மன் பயணத்தை முடித்துக்கொண்டு ஒஸ்ரியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியவுடன் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுடன் கலந்துரையாடுவார் என அறியமுடிகின்றது.

இதற்குரிய ஏற்பாடுகள் தற்போது இடம் பெற்று வருகின்றன. இந்தச் சந்திப்பின் பின்னர் பொன்சேகாவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது. 

படையினர் நலன்சார்ந்த அமைச்சுப் பதவியொன்றே அவருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சி அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துகொண்டு ஐக்கிய தேசிய முன்னணி அரசில் பங்காளிக்கட்சியாக இணைந்துகொண்டது. 

இதன்பலனாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பி. பதவி பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டது.

பொன்சேகாவுக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டதற்கு ஜனாதிபதியும் முக்கிய பங்களிப்பு வழங்கியுள்ளார்.

இந்த நிலையிலேயே, ஜனாதிபதியை சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக சந்திப்புக்கு நேரம் வழங்குமாறு பொன்சேகா தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது.

இதன்படி ஒஸ்ரியாவிலிருந்து ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் இந்தச் சந்திப்பு இடம்பெறுவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.