ராஜபக்ஸவினரின் கோட்டைக்குள் சென்று ஆராயவுள்ள பிரதமர் !

Unknownராஜபக்ஸவினரின் அரசியல் கோட்டையாகக் கருதப்படும் ஹம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மஹிந்தவின் அபிவிருத்தித் திட்டங்களில் இடம்பெற்றுள்ள மோசடிகள் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று ஆராயவுள்ளார்.

இன்று சனிக்கிழமை அங்கு விஜயம் செய்யவுள்ள அவர், மஹிந்த ஆட்சிக் காலத்தில் அங்கு முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை முழுமையாக ஆராயவுள்ளார். 

யோஷித ராஜபக்ஸ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மஹிந்தவின் அபிவிருத்தித் திட்டங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று ஆராயவுள்ளமையானது, ராஜபக்ஸ குடும்பத்தினர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட மத்தல விமான நிலையம், மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச கிரிக்கெட் மைதானம், மிருகக்காட்சிச்சாலை, பூந்தோட்டம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், சர்வதேச மாநாட்டு மண்டபம் மற்றும் ரண்மினிதென்ன சினிமா கிராமம் ஆகியவற்றுக்கு பிரதமர் ரணில் விஜயம் செய்யவுள்ளார். 

கடந்த ஆட்சியில் அபிவிருத்திப் பணிகள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்தத் திட்டங்களில் பாரிய மோசடிகள் நிகழ்ந்துள்ளதாகவும் அப்போது எதிர்க்கட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டி வந்தது. 

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியேற்ற பின்னர் இங்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கின்றமையால், இது தொடர்பில் ஆராய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

அத்துடன், இவற்றை எதிர்காலத்தில் முன்னெடுத்துச்செல்வது தொடர்பிலும் நிர்வாகத்தினருடன் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று காலை 10 மணிக்கு முதலாவதாக மத்தல விமான நிலையத்துக்கு பார்வையிடச் செல்லும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மாலை நான்கு மணிக்கு ஏனைய திட்டங்களைப் பார்வையிடவுள்ளார்.