ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜேர்மனிக்கான உத்தியோக பூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்றைய தினம் ஒஸ்ரியா சென்றுள்ளார். அங்கு அவருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் ஒஸ்ரிய ஜனாதிபதி ஹெய்ன்ஸ் பிஸ்கருக்கும் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில், நீண்டகாலப் போரினால் ஏற்பட்ட பாதிப்புகளையும், இழப்புகளையும் சீராக்கவும், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும், உதவ வேண்டும் என்று ஒஸ்ரிய ஜனாதிபதியிடம் மைத்திரிபால வேண்டுகோள் விடுத்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வறுமையில் வாழும் மக்களுக்கு அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.
அதற்கான செயற்பாடுகளை நல்லாட்சி அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளது . இதற்கு நட்பு நாடான ஒஸ்ரியா உதவ வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை, பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கு இரண்டு நாடுகளின் தலைவர்களும் இணக்கப்பாடு கண்டுள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்ற 26 ஆண்டுகாலப் போரினால், ஏற்பட்ட இழப்புக்களையும் வடுக்களையும் மீளமைத்து நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், உள்நாட்டில் அமைதியை ஏற்படுத்தவும் நட்பு நாடுகளின் உதவி எமக்கு மிகவும் அவசியம் எனவும் மைத்திரிபால தெரிவித்தார்.
இதேவேளை இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள், மேலும் வலுப்பெறும் என்று நம்புவதாக இரு ஜனாதிபதிகளும் குறிப்பிட்டுள்ளனர்.