வெளிநாடுகள் எவற்றில் இருந்தும் சி.எஸ்.என் தொலைக்காட்சிக்கு பணம் கிடைக்கவில்லை: உதய கம்மன்பில

யோஷித்த ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய்யானது எனவும் அது அரசியல் பழிவாங்கல் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
uthaya

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். 

2006ம் ஆண்டு இலக்கம் 5 என்ற பணச் சலவை சட்டத்தின் கீழ், விபரங்களை வெளியிட முடியாத வகையிலான பணத்தை பயன்படுத்தி சீ.எஸ்.என் தொலைக்காட்சியை ஆரம்பித்தது தொடர்பான குற்றச்சாட்டின் பேரிலேயே நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் தொலைக்காட்சியின் பணிப்பாளர்கள் மற்றும் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி உள்ளிட்டோரை கைது செய்துள்ளனர். 

தெளிவாக கூறுவதென்றால், கறுப்பு பணத்தை வெள்ளையாக்கிய குற்றச்சாட்டில் இவர்களை கைது செய்துள்ளனர். 

எவ்வாறு கிடைத்தது என்பதை வெளிப்படுத்த முடியாத அளவில் வெளிநாடு ஒன்றில் இருந்து சி.எஸ்.என் தொலைக்காட்சிக்கு 5 மில்லியன் டொலர்கள் கி்டைத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு. வெளிநாடுகள் எவற்றில் இருந்தும் சி.எஸ்.என் தொலைக்காட்சிக்கு பணம் கிடைக்கவில்லை. அதற்கான சாட்சியங்கள் இருந்தால், அதனை வெளியிடுமாறு நாங்கள் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கின்றோம். 

207 மில்லியன் ரூபா பணத்தை குறித்த தொலைக்காட்சி முதலீடு செய்துள்ளது என்பது உண்மை. 

அந்த நிதி எப்படி பெறப்பட்டது என்பதற்காக சகல எழுத்து மூலமான சாட்சியங்களையும் நிறுவனம் பொலிஸாரிடம் கையளித்துள்ளது. அவ்வாறு இருக்கும் போது பொலிஸார் எப்படி இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டை சுமத்த முடியும்?. 

யோஷித்த ராஜபக்ச விளையாட்டு வீரர் அவர் கடற்படை றகர் அணிக்கும் தேசிய றகர் அணிக்கும் தலைமை தாங்கியுள்ளார். 

குறிபார்த்து சுடுதல் போட்டியில் தேசிய போட்டியில் வெற்றிபெற்று சர்வதேச போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 

அத்துடன் தேசிய விளையாட்டு கழகம் ஒன்றின் தலைவராகவும் யோஷித்த பணியாற்றியுள்ளார். 

உலகில் பல நாடுகளில் விளையாட்டுக்காக தொலைக்காட்சி அலைவரிசைகள் இருக்கின்றன. இலங்கையில் அப்படியான தொலைக்காட்சி இருக்கவில்லை. 

இதனால், நண்பர்களின் சி.எஸ்.என் தொலைக்காட்சியை ஆரம்பிக்க யோஷித்த நடவடிக்கை எடுத்தார், ஆனால், அவர் அந்த தொலைக்காட்சியின் பணிப்பாளரோ உரிமையாளரோ அல்ல. 

தனது கனவை நனவாக்கும் நிறுவனம் என்பதால், நேரடியாக தலையிட்டு நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார். அத்துடன் நிறுவனத்தின் விரிவாக்கல் தூதுவராக செயற்பட்டு வந்தார் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.