தலைகள் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளை பிரிக்க சவுதியில் நடந்த 10 மணிநேர ஆபரேஷன் வெற்றி!

6cd71218-cf7e-4529-baf8-476042c67228_S_secvpf
சிரியாவைச் சேர்ந்த தலைகள் ஒட்டிப்பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளை பிரிப்பதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் ஆஸ்பத்திரியில் நடைபெற்ற சிக்கலான ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
 
சிரியாவைச் சேர்ந்த டுக்யா மற்றும் யாகீன் அல் காதர் என்ற இந்த பெண் குழந்தைகள் பிறக்கும்போதே தலைகள் ஒட்டியபடி பிறந்திருந்தன. இத்தகைய குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு சவுதி அரேபியாவில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் ஆஸ்பத்திரியில் இலவசமாக ஆபரேஷன் செய்யப்படுகிறது.
 
அவ்வகையில், இந்த ஆபரேஷனின் மூலம் தனது மகள்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்குமாறு சவுதி மன்னருக்கு இந்தக் குழந்தைகளின் தந்தை கடந்த 2013-ம் ஆண்டு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு மன்னரும் ஒப்புதல் அளித்தார்.
 
பின்னர், சிரியாவில் இருந்து சவுதிக்கு அழைத்துவரப்பட்ட டுக்யா மற்றும் யாகீனுக்கு முதலில் இரண்டுகட்ட ஆபரேஷன்கள் செய்யப்பட்டன.
 
முதல்கட்டமாக கடந்த 2014-ம் ஆண்டு இரண்டு தலைகளின் மூளைப்பகுதியையும் இணைக்கும் ரத்த நாளங்கள் துண்டிக்கப்பட்டு, இரண்டுக்கும் இடையில் சிலிக்கான் துண்டு பொருத்தப்பட்டது. பின்னர், மேலும் சில நரம்புகள் துண்டிக்கப்பட்டு, பிரிக்கப்பட்டது. மூன்றாவது கட்டமாக தலைகளை துண்டித்து, பிரிப்பதற்கான இதர ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
 
இறுதிக்கட்ட ஆபரேஷனில் 60 சதவீதம் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்ற நிலையில் 22 டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் சேர்ந்து சுமார் பத்து மணி நேரம் நடத்திய ஆபரேஷன் மூலம் இரு குழந்தைகளின் தலைகளையும் வெற்றிகரமாக பிரித்துள்ளனர்.
 
தற்போது தீவிர கண்காணிப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ள அந்த சிறுமிகள் மேலும் இருகட்ட ஆபரேஷன்கள் முடிந்து, பூரண நலம் பெற்று சொந்த நாட்டுக்கு திரும்ப அனைவரும் வேண்டிக் கொள்வோம்.