எவ்வித உண்மையும் கிடையாது : சிறைச்சாலை திணைக்களம் !

welikada prison
welikada prison
முக்கிய பிரபு சிறைக்கூடமொன்று புனரமைக்கப்பட்டு வருவதாக வெளியான செய்தி பொய்யானது என சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.

வெலிக்கடைச் சிறைச்சாலையின் முக்கிய பிரபு சிறைக் கூடமொன்று அவசர அவசரமாக புனரமைக்கப்பட்டு வருவதாகவும், 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோரில் ஒருவர் விரைவில் கைது செய்யப்பட்டு அந்தக் சிறைக் கூடத்தில் அடைக்கப்படலாம் என பத்திரிகைள் மற்றும் இணைய ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 

எனினும் இந்த செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என சிறைச்சாலை திணைக்களம் அறித்துள்ளது. 

பொய்யான செய்திகளை வெளியிட்டமை தொடர்பில் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பிரபல நடிகர், அரசியல்வாதி விஜயகுமாரதுங்க, பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வெலிக்கடை சிறைச்சாலையின் எஸ் பிரிவு இவ்வாறு புனரமைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

எனினும், சரத் பொன்சேகா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் எஸ் பிரிவு கைதிகளின் பல் சிகிச்சைப் பிரிவாக மாற்றப்பட்டது என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துசார உபுல்தெனிய ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். 

சில ஆண்டுகளாகவே இந்தப் பகுதி சிறைச்சாலை பல் சிகிச்சைப் பிரிவாக செயற்பட்டு வருகின்றது. 

இந்த பல் சிகிச்சைப் பிரிவு அகற்றப்படவில்லை அதற்குள் பிரபுக்கள் சிறைக்கூடமொன்று கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். 

பொய்யான செய்திப் பிரசூரம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.