நல்லாட்சியிலே முஸ்லீம் சமூகத்தின் பங்கு என்ன? வகிபாகம் என்ன? கேள்வி எழுப்பும் அமீர் அலி !

எம்.எம்.ஜபீர்
 தமிழ் பேசும் மக்களுடைய பிரச்சினைகள் இந்த காலகட்டத்திலே தீர்க்கப்படவில்லை என்றால் என்றுமே தீர்க்கப்பட முடியாது. தமிழ் அரசியல் தலைவர்கள் முஸ்லிம் அரசியல் தலைவர்களோடு பேசி அவர்களுக்குள் இருக்கின்ற பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு எடுக்கப்பட்டதன் பின்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் சேர்ந்து தேசியத்திலே அழுத்தம் கொடுக்க தவறுவோம் என்றால் இரண்டு சமூகமும் தோல்வியடைந்துவிடும் என்கின்ற விடயத்தினை இரண்டு சமூகத்தின் அரசியல் தலைமைகளும் தெளிவாக உள்வாங்கி கொள்ள வேண்டும்.
13_Fotor
இவ்வாறு மத்தியமுகாம் பிரதேசத்தில் தையல் பயிற்சியை பூர்த்தி செய்த யுவதிகளுக்கு தையல் இயந்திரங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட கிராமிய பொருளாதார பிரதி அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
மத்தியமுகாம் தொழில் பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்தியகுழு தலைவர் ஏ.ஆர்.வஹார்தீன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் லக்சல நிறுவனத்தின் தவிசாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சீ.எம்.ஹலீம், நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.கே.ஏ.சமட்,  நாவிதன்வெளி அமைப்பாளர் எம்.எச்.அலியார், இணைப்பாளர் ஏ.எம்.இன்ஹாமுல் ஹஸன் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.
பிரதி அமைச்சர் அங்கு தொடர்ந்த உரையாற்றுகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் இரண்டு தேசிய கட்சிகளும் சேர்ந்து தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டுகின்ற சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்த்துதர வேண்டும் என்று விரும்புகின்ற உடன்பாட்டோடு நாங்கள் இந்த அரசாங்கத்துடன் பயணித்த கொண்டிருக்கின்றோம். எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது என்பது. இறுதிக்கட்டத்திலே தமிழ் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் இருந்து பேசிக் கொண்டிருக்க வேண்டிய சூழலில் நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம். இதில் அவசரமாக செய்ய வேண்டிய வேலை ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி வேலை என்பது ஒரு சமூகத்தை மையப்படுத்தி செய்கின்ற வேலை என்பதை அவர்கள் இப்போதும் உள்வாங்கி கொண்டிருக்கின்றார்கள்.
12_Fotor
அது அப்படியல்ல ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி என்பது அந்த பிரதேசத்திலே இருக்கின்ற எல்லா மக்களுக்கும் சென்றடைகின்ற வேலைத்திட்டத்தை யாராலும் செய்ய முடியும் என்பதை பெயர் குறிப்பிட்டு முஸ்லிம் சமூகத்திலே இருக்கின்ற ஒருவரை அபிவிருத்தி குழு தலைவராக நியமித்ததற்காக அதை பெரியதொரு அநியாயமாக எதிர்ப்பாக பேசுவதென்றால் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை தெரிவு செய்திருப்பது அதுவும்  சிங்கள தலைவனை தெரிவு செய்திருப்பது எவ்வளவு பெரிய அநியாயம், மஹிந்த ராஜபக்ஷவை கடந்த காலத்திலே சிறுபான்மை சமூகம் தெரிவு செய்தோம் அது எவ்வளவு பெரிய அநியாயம். எனவே தமிழ் அரசியல் தலைமைகள் தெளிவாக பேச வேண்டும் முஸ்லிம் உறவிலும் தமிழ் உறவிலும் இன்னும் இன்னும் சீண்டிப்பார்க்கின்ற வேலையை அவர்கள் செய்யக்கூடாது. முஸ்லிம் அரசியல் தலைமைகள் கடந்த காலத்திலே மிகவும் நியாயபூர்வமாகவும், கௌரவமாகவும், அந்நியோன்யமாகவும் தமிழ் சமூகத்துடன் நடந்துள்ளனர். இன்னும் நாங்கள் தமிழ் சமூகத்திற்கு உதவிகள் செய்வதற்காக பல தியாகங்களுடனும், முயற்சிகளுடனும் இருந்து வருகின்றோம். அதில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தெளிவாக இருந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் தமிழ் பிரதேசங்களுக்கு சென்று நாங்கள் வேலை செய்யக்கூடாது என்று விரும்புகின்ற அல்லது தமிழ் உறவுகள் முஸ்லிம் அரசியல் தலைவர்களை விரும்பி விடுவார்கள் என்று தமிழ் அரசியல் தலைவர்கள் தான் பயப்படுகின்றார்களே தவிர வேறு எந்தவொரு பிரச்சினையும் இந்த நாட்டிலே இருக்கவேயில்லை என்பதனை தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்த நல்லாட்சியிலே முஸ்லீம் சமூகத்தின் பங்கு என்ன? வகிபாகம் என்ன? என்பதை இன்னும் திட்டவட்டமாக வரையறை செய்து கொள்ள முடியாததொரு சூழலிலேதான் நாங்கள் பேசிக்கொண்டிருக்கின்றோம். சிறுசிறு விடயங்களுக்கெல்லாம் கலந்தாலோசனை செய்கின்றோம். ஆனால் அரசியல் வருகின்ற போது மாத்திரம் ஏன் இரண்டு கூட்டமாக அல்லது மூன்று கூட்டமாக பிரிகின்றார்கள் என்பதுதான் எனக்கு வேடிக்கையாக இருக்கின்றது.

 
 14_Fotor