எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் எப்.சி.ஐ.டியை கலைப்பதில்லை !

Ranil-maithri
எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் எப்.சி.ஐ.டியை கலைப்பதில்லை என்று ஜனாதிபதியும், பிரதமரும் முடிவெடுத்துள்ளனர் என்று நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.

நல்லாட்சி உதயமாகிய பின்னர், பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக பொலிஸ் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவொன்று அமைக்கப்பட்டது. 

இதன்மூலம் அதிரடி கைதுவேட்டைகளும் இடம்பெற்றன. முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலர் துருவித் துருவி விசாரிக்கப்பட்டனர். 

இதனால், மஹிந்த அணியுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எப்.சி.ஐ.டிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியது. மேற்படி பிரிவு கலைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

தற்போது மஹிந்தவின் இரண்டாவது புதல்வர் ஜோஷித கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், எப்.சி.ஐ.டியை கலைக்கவேண்டும் என்ற கோஷம் மேலோங்கியுள்ளது. அரசில் அங்கம் வகிக்கும் சு.க. அமைச்சர்களும் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளனர். 

எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விசாரணைகளை நிறுத்துவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கும் ஜனாதிபதி எப்.சி.ஐ.டிக்குரிய அதிகாரங்களையும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பலப்படுத்தியுள்ளார்.