மஹிந்த ராஜபக்ச இழிவான பிரச்சாரங்களில் ஈடுபடுவது மன வேதனையளிகின்றது : முஜிபுர் ரஹ்மான் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வதற்காக மிகவும் இழிவான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

mahintha

தற்போதைய அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் காட்டி வரும் சிரத்தை மற்றும் நல்லாட்சி முனைப்புக்களினால் மஹிந்த ராஜபக்ஸ பொறாமை கொண்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவினால் ஏற்படுத்த முடியாத நல்லாட்சியையும் நல்லிணக்கத்தையும் இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஈழத் தேசிய கீதம் பாட விரும்பிய ஒரு தரப்பிற்கு தமிழில் நமோ நமோ தாயே என பாடுவதற்கு அரசாங்கம் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டதனை மஹிந்த ராஜபக்ஸ மிகுந்த காழ்ப்புணர்ச்சியுடனேயே நோக்கியதாகத் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாகவே, அடுத்த சிறுபான்மையினர் தேசிய கீதத்தை அரபிய மொழியில் பாட கோருவார்கள் என அண்மையில் மஹிந்த தெரிவித்திருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை பத்து ஆண்டுகள் ஆட்சி செய்த மூத்த அரசியல்வாதியான மஹிந்த ராஜபக்ஸ மிகவும் தரம் குறைந்து இவ்வாறு இழிவான பிரச்சாரங்களில் ஈடுபடுவது மன வேதனையளிப்பதாக ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது நல்லிணக்கத்திற்கான ஓர் அத்தியாயம் என்பதனை அனுபவ முதிர்ச்சியுடைய அரசியல்வாதிகள் புரிந்து கொள்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின் பின்னர் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொன்னான சந்தர்ப்பம் கிட்டிய போதிலும் மஹிந்த அரசாங்கம் அதனை செய்யத் தவறியதாகவும், அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதியும் பிரதமரும் மேற்கொண்டு வரும் நல்ல முயற்சிகளைக் கண்டு பொறாமை கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஸ இனவாதம் மூலம் அந்த முயற்சிகளை முறியடிக்க முயல்கின்றார் என ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.