ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை அழிக்கும் பாவச் செயல்களில் பங்கேற்க முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்க அனுமதிக்குமாறு விடுத்த கோரிக்கை தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
51 பாராளுமன்ற உறுப்பினர்கள் தனியான குழுவாக செயற்பட அனுமைதி கோரி நிற்பதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த விடயம் குறித்து தனித்து தீர்மானிக்க முடியாது எனவும், சர்வாதிகாரியைப் போன்று செயற்படத் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சிக்குள் குழுக்கள் இருக்க முடியும் என்ற போதிலும் குழுக்களுக்குள் கட்சிகள் இருக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினருக்கு கால நேரம் தொடர்பில் உள்ள பிரச்சினை தமக்கு தெரியும் எனவும் அதற்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை அழிக்க ஒத்துழைப்பு வழங்க முடியாது எனவும் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்மானம் எடுக்கப்பட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.