புத்தளம் மக்களையும், மண்ணையும் கௌரவப்படுத்துவதற்காகவே எம்.பி பதவியை வழங்கினோம் !

“புத்தளம் சாஹிரா கல்லூரியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த அத்தனை பங்களிப்புக்களையும் நல்குவேன். புத்தளம் மக்களையும், மண்ணையும்  கௌரவப்படுத்துவதற்காகவே கட்சிக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் எம்.பி பதவியை வழங்கினோம்.”

இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

புத்தளம் சாஹிரா கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி, கல்லூரியின் அதிபர் யாகூப் தலைமையில் நடைபெற்ற போது பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார். 

இந்த நிகழ்வில் எம்.எச்.எம்.நவவி எம்.பி, வட மேல் மாகாண சபை உறுப்பினர்களான நியாஸ், தாஹிர், புத்தளம் முன்னாள் நகரபிதா கே.ஏ.பாயிஸ், முன்னாள் எம்.பி. டாக்டர்.இல்யாஸ், ஐதேக அமைப்பாளர் அலிகான், மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் சப்ரி, முன்னாள் நகரசபை உறுப்பினர் முஹ்சி ரஹ்மதுல்லாஹ், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் யஹியா, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ் ஆகியோர் உட்பட இன்னும் சிலர் அதிதிகளாகப் பங்கேற்றனர்.

அமைச்சர் இங்கு கூறியதாவது, 

7M8A6962

இந்த விளையாட்டுப் போட்டியிலே பங்குபற்றிய மாணவர்களின் ஆற்றல்களையும், திறமைகளையும் கண்டு வியந்து நிற்கின்றேன். சுமார் ஒருமாத காலம் நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளின் பிரதிபலன் இன்று கிடைத்துள்ளது.

நிகழ்ச்சிகள் எல்லாம் சிறப்பாக அமைந்திருப்பது பாராட்டத்தக்கது. பல கட்சிகளைச் சார்ந்தவர்களை ஒரே மேடையில் சந்திக்க வைத்து, உங்கள் திறமைகளை ரசிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கியமை மிகவும் அருமையான விடயம். 

நமது சமுதாயம் கல்வியிலே மிகவும் பின்தள்ளப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. நாம் கல்வியில் முன்னேற வேண்டும். இந்த வருட உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில், உங்கள் பாடசாலை மாணவன் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றமை ஏனைய மாணவர்களுக்கு ஓர்  எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். 

மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நெருக்கமான உறவு எப்போதும் இருக்க வேண்டும். பெற்றோர்களாகிய நீங்களும், மாணவர்களின் கல்வியிலே விழிப்பாக இருக்க வேண்டும். இந்த மைதானத்தை அடுத்த வருடத்துக்குள், ஒரு வெளிச்சம் உள்ள மைதானமாக மாற்றுவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அமைச்சர் கூறினார்.                      

7M8A6979

7M8A6929