ஹுசைன் அவர்கள் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை சந்திக்காமை கவலை அளிக்கின்றது !

 

சாய்ந்தமருது-எம்.எஸ்.எம்.சாஹிர்

 

 

  இலங்கை வந்திருந்த மனித உரிமைகள் ஆணையாளர் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை சந்திக்காமை கவலையை அளிக்கின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

 

ahm-aswar

மனித உரிமைக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் செயிட் அல்-ஹ{சைன் யாழ்பாணத்துக்குச் சென்றிருந்த போதிலும் அங்கு முஸ்லிம்கள் வாழும் பகுதிக்குச் சென்று பார்க்கத் தவறி விட்டதையிட்டு தன்னுடைய ஆழ்ந்த கவலையை வட பகுதி முஸ்லிம்கள் சார்பாகத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவர் யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலைப் பார்க்கச் சென்ற வேளையில், வட பகுதி முஸ்லிம்கள் சிலர் பாதிப்புற்ற  முஸ்லிம்களான  தங்களையும் சந்திக்க வேண்டும் என்று  வெளியில் பதாதைகளை ஏந்தி, அவரை வலுக்கட்டாயமாக தம் பக்கம் அழைத்து மகஜர் ஒன்றையும் சமர்ப்பித்து இருக்கும் வட பகுதி முஸ்லிம்ககளுடைய  தைரியத்தைப் பறை சாற்றுகிறது.

வடக்குக்கு விஜயம் செய்து அங்கு ஆளுனர் மற்றும் முதலமைச்சரைச் சந்தித்த உயர்ஸ்தானிகர், வடக்கிலுள்ள  முஸ்லிம் பகுதியான மூர் வீதி, முஸ்லிம் பள்ளிவாசல் உடைக்கப்பட்ட இடம், கதீஜா பாடசாலை தரைமட்டமாக்கப்பட்டு இருந்த இடம். அதே போன்று பேரறிஞர்களான ஏ.எம்.ஏ.அஸீஸ், நீதிபதி எம்.எம்.அப்துல் காதர் போன்றோர் பிறந்த இடம். அவர்களுக்கு என்ன கதி நடந்தது?  அவர்களது மனித உரிமைகளை விடுதலைப் புலிகள் எவ்வாறு மீறினார்கள், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்களை ஒரே இரவில் தாம் பிறந்த தாயகத்திலிருந்து விரட்டியடித்தார்கள். இவைகள் ஒன்றும் செயிட் அல்-ஹ{சைன் கண்களுக்குப் புலப்படவில்லையா? என்று முஸ்லிம்கள் கேட்கத் தயாராகிவிட்டனர்.

அது மட்டுமல்ல, ஜோர்தானில் பிறந்த செயிட் அல்-ஹ{சைன் இலங்கை வரும் இவர், அயல் நாடாக உள்ள பலஸ்தீனத்துக்கு ஏன் செல்லவில்லை. பல்லாண்டு காலமாக அங்கே மனிதப் பலி நடக்கின்றது. மனித உரிமைகள் இரவும் பகலும், நடுநிஷியிலும் கூட மீறப்படுகின்றது. ஆயிரக்கணக்கான முதியோர்கள், தாய்மார்கள், சிறுவர்கள் என தினந்தோறும் கொன்று குவிக்கப்படுகின்றார்கள். இவற்றை காணாதவர் போல இங்கு வருவதன் அர்த்தம்தான் என்ன? இன்று லிபியா, ஈரான், யெமன், சிரியா போன்ற நாடுகளில் இரவு பகலாக மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அமெரிக்காவுடைய அடி வருடியாக அவர் இங்கு வந்திருக்கின்றாரா? அல்லது உண்மையிலேயே மனிதாபிமானத்தோடு இங்கு நடைபெற்ற சம்பவங்களைப் பார்க்க வந்திருக்கின்றாரா? என்ற கேள்விகளை நாங்கள் பகிரங்கமாக எழுப்ப வேண்டியுள்ளது.

மற்றொரு வகையில் பார்க்கப் போனால், ஜெனீவாவில் நடை பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி தான் நாங்கள் நடப்போம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறும் பொழுது, இல்லை இல்லை எமக்கு எங்களுடைய நாட்டு நீதிபதிகள் இங்கிருக்கும் போது வெளிநாட்டிலிருந்து யாரும் இங்கு வரவழைக்கப்படமாட்டார்கள் என்று ஜனாதிபதி அடித்து உறுதியாகச்  சொல்கின்றார். அப்படியென்றால், இந்த அரசாங்கம் சர்வதேச ரீதியிலும் மனித உரிமையை மீறி, சம்பவங்கள் இரண்டு குரலாக ஒலிக்கின்றது. என்ற பரிதாபத்தைப் பார்க்கின்றோம். இது யாருடைய அரசாங்கம் என்று நாங்கள் கேட்க விரும்புகின்றோம். ஜனாதிபதியுடைய அரசாங்கமா?, பிரதமருடைய அரசாங்கமா? இரண்டு குரலில் தலைமைத்துவம் ஒரு நாட்டில் எந்த வகையிலும் பேச முடியாது. எனவே இதுவெல்லாம் மிகவும் பகடியாக இருக்கின்றது. 

கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் நடந்த சம்பவம் தெரியும். ஹஜ்ஜை முடித்துவிட்டுச் செல்கையில் காத்தான்குடிக்கு அருகாமையில் வைத்து முஸ்லிம்களை கொன்று குவித்த விடுதலைப் புலிகள் முஸ்லிம்களுடைய உரிமைகளைப் பறித்தவர்கள். உரிமைகளை இல்லாமல் செய்தவர்கள். மனித உரிமையோ என்ன உரிமையோ என்றாலும் அவர்களுடைய மரணித்த சடலங்களைத்தான் காத்தான் குடியிலே நாங்கள் கண்டோம். இவற்றை எல்லாம் பார்த்தும் பாராதது மாதிரி வந்து செயிட் அல்-ஹ{சைன் இங்கே என்ன நாடக மாடிச் சென்றிருக்கிறார். இதை இட்டு முஸ்லிம்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். வட பகுதி முஸ்லிம்கள் தைரியமாக தங்களுக்கிழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை அரசாங்கத்திடமும் ஐக்கிய நாடுகள் சபையிடமும் முன் வைக்க வேண்டும். அத்துடன் செயிட் அல்-ஹ{சைனை இடை மறித்து கஷ்டப்பட்டு அவரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்த வடபகுதி முஸ்லிம்களின் செயலை நான் வெகுவாகப் பாராட்டுகின்றேன். என்றும் தெரிவித்தார்.