சாய்ந்தமருது- எம்.எஸ்.எம்.சாஹிர்
நாட்டில் எதிர்காலத்தில் மும் மொழிப்பாடசாலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகின்றது. அவ்வாறானால் முஸ்லிம் பாடசாலைகளின் நிலை என்ன என்பது பற்றி சமூகம் தீவிரமாக ஆராய வேண்டும் என முன்னாள் முஸ்லிம் சமய கலாசார ராஜாங்க அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் பிரதித் தலைவருமான ஏ.எச்.எம்.அஸ்வர் கூறினார்.
அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் செயற்குழு கூட்டம் கொழும்பில் ஜமாஅதே இஸ்லாமி தலைமையக கேட்போர் கூடத்தில் நடை பெற்ற போது அங்குரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவர் பேராசிரியர் ஹ{சைன் இஸ்மாயில் தலைமையில் நடை பெற்ற இக் கூட்டத்தில் மேலும் பேசிய அஸ்வர் கூறியதாவது,
இலங்கையின் முஸ்லிம் பாடசாலைகள் சம்பந்தமாக எதிர்கால நிலைமை என்ன என்பதைப் பற்றி நாங்கள் மீள் ஆய்வு செய்ய வேண்டும். மும் மொழி பாடசாலைகள் எதிர்காலத்தில் உருவாக்கப்படவேண்டும் என்ற கருத்து பரவலாக இருந்துள்ளது. அப்படியென்றால் முஸ்லிம் பாடசாலைகளின் நிலை என்ன? முஸ்லிம் பாடசாலைகள் உருவாகுவது சம்பந்தமாக ஒரு பெரிய வரலாறு உள்ளது. அன்று முஸ்லிம் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இஸ்லாமிய அடிப்படையில் கல்வி போதிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் ஏனைய பாடசாலைகளுக்கு அனுப்ப மறுத்துவிட்டனர். அன்று இருந்த தலைவர்களான டி.பி ஜயா, டாக்டர் எம்.சீ.எம்.கலீல் போன்றவர்கள் இணைந்து இலவசக் கல்வியின் தந்தையான டாக்டர் சீ.டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா, டி.எஸ்.சேனாநாயக்க ஆகியோரைச்சந்தித்து தனியாக முஸ்லிம் பாடசாலைகள் உருவாக்கப்படவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்த போது, அன்று அதை ஏற்றதன் காரணமாகத்தான் இன்றும் முஸ்லிம் பாடசாலைகள் இயங்குகின்றன. முஸ்லிம் பாடசாலைகள் இல்லாவிட்டால் ஏனைய துறை சார்ந்த கல்வியில் முஸ்லிம்கள் மிகவும் பிற்போக்கடைய நேரிடும். முஸ்லிம் பாடசாலைகள் இருப்பதனால்த்தான் கல்வி அமைச்சில் மற்றும் ஏனைய அமைச்சுகளிலும் முஸ்லிம் ஆசிரியர்கள், மௌலவிமார்கள் என்று இருக்கிறார்கள். அனைத்துவிடயங்களுக்கும் இந்த முஸ்லிம் பாடசாலைகள் இயங்குவதனால்த்தான் அவைகள் இயங்குவதற்கான ஒரு சூழ் நிலை இலங்கையில் உள்ளது. எனவே இதனை எந்த அரசாங்கமாக இருந்தாலும் பாதுகாத்து வந்துள்ளது. ஒரு முறை ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்த போது, ஐ.எம்.ஆர்.ஏ. ஈரியகொல்ல கல்வி அமைச்சராக நியமனம் பெற்றார். அவ்வேளையில், அகில இலங்கை முஸ்லிம் மாநாடு முஸ்லிம்களுடைய பிரச்சினை சம்பந்தமாக மலே வீதியில் அமைந்திருந்த கல்வி அமைச்சில் அகில இலங்கை முஸ்லிம் லீக் தலைவர் டாக்டர் எம்.சீ.எம்.கலீல் தலைமையில் பேட்டி காணச் சென்றது.
அன்று மௌலவி ஆசிரியர்களை நியமிக்காத ஒரு நிலை இருந்ததன் காரணமாக அவை பற்றி அமைச்சரிடம் வினவியது. அமைச்சருக்கு கோபம் ஏற்பட்டு இவ்வாறு ஒவ்வொரு இனங்களுக்கும் பாடசாலைகள் இயக்க முடியாது என்று கூறியவுடன் டாக்டர் எம்.சீ.எம்.கலீல், அமைச்சரை அதட்டி, அவரைப் பேசவிடாது தடுத்து, முஸ்லிம் பாடசாலைகள் உருவாகுவதற்குரிய வரலாற்று உண்மைகளை எடுத்துரைத்ததன் காரணமாக அது தொடர்ந்து இருந்து வந்தது. எனவே இப்படியான பல்வேறு பிரச்சினைகள், பல்கலைக்கழகப் பிரச்சினைகள், முஸ்லிம்களுடைய ஆய்வு சம்பந்தமான விடயங்கள் போன்ற பிரச்சினைகள் இன்று பரவலாகக் காணப்படுகின்றது. எனவே, இது விடயமாக தற்போது உள்ள கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிய வசம் அவர்களைச் சந்தித்துரையாடவேண்டும்.
முஸ்லிம் கல்வி மாநாட்டை உருவாக்கி முஸ்லிம் கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய அதன் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் கொழும்பு
சாஹிராக் கல்லூரின் அதிபர் எஸ்.எல்.எம். ஷாபி மரிக்கார் கல்விக்குச் செய்த சேவைகளை சமுதாயம் ஒரு போதும் மறக்க முடியாது. என்றார்.
பேராசிரியர் ஏ.ஜீ.ஹ{சைன் இஸ்மாயில் உரையாற்றுகையில்,
கல்வி மாநாட்டின் உயர்வுக்காகவும் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கும் அனைத்து வழிகளிலும் தான் தயாராக இருப்பதாகவும் மற்றும் மலேசியாவிலிருந்தும் ஏனைய முஸ்லிம் நாடுகள் அனைத்திலிருந்தும் அறிஞர்கள், பேராசிரியர்கள், கல்விஆய்வாளர்கள் இலங்கை நாட்டின் முஸ்லிம்களின் கல்வி அபிவிருத்திக்கு உதவ முன் வந்திருப்பதாகவும் தமக்கு தெரிவித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
கல்வி மாநாட்டின் செயலாளர் ரசீட் எம்.இம்தியாஸ், கே.எம்.ஏ.ஹசன், ஸ்தாபக உறுப்பினரான எப்.எம்.பைரூஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.