மறைந்த அமைச்சரும் முன்னாள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.டி.எஸ் குணவர்தனவின் வெற்றிடத்திற்கு, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் சற்று முன்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குணவர்தனவின் மறைவினால் ஏற்பட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு முன்னாள் இராணுவத் தளபதியை நியமிக்க ஐக்கிய தேசியக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, நாளைய தினம் சரத் பொன்சேகா சபாநாயகர் கரு ஜயசூரியவின் எதிரில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், படைவீரர் நலன்புரி அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் விரைவில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என ஜனநாயகக் கட்சியின் உத்தியோகப் பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ உள்ளிட்ட சில தரப்பினர் சரத் பொன்சேகாவிற்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்குவதனை பகிரங்கமாக எதிர்த்து வந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், இன்றைய தினம் நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் சரத்பொன்சேகாவிற்கு தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்கத் தீர்மானிக்க்பபட்டுள்ளது.