தைவான் நிலநடுக்க பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு !

_88148701_88148700

 

தைவான் நாட்டின் தென்பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை தைவான் அதிபர் மா யிங்-ஜியோ இன்று நேரில் சென்று ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவுள்ளார்.

பூகம்பம், நிலநடுக்கம், பெருவெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் தைவானில் கடந்த ஆறாம் தேதி அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் அறிவித்திருந்தது. 

தைவானின் இரண்டாவது பெரிய நகரமான காவோசியுங் நகரில் இருந்து சுமார் 39 கிலோமீட்டர் தொலைவில் பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில், உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் விளைவாக டைனான் நகரில் 16 தளங்களை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்பட நான்கு கட்டிடங்கள் சீட்டுக்கட்டுபோல் சரிந்து விழுந்தது. அந்த இடிபாடுகளில் சிக்கிய பத்து மாத குழந்தை உள்பட ஏழு பேர் பலியாகினர்.

 

_88144722_88144721

அருகாமையில் உள்ள இன்னொரு ஏழு மாடி கட்டிடத்தில் சிக்கியிருந்த 340 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், அவர்களில் காயமடைந்த சுமார் ஐநூறு பேர் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் நேற்று தெரிவித்த பேரிடர் மீட்புக் குழுவினர், தொடர்ந்து அங்கே இடிபாடுகளை அகற்றும் பணியிலும், மக்களை மீட்கும் பணியிலும் சுமார் 2 ஆயிரம் பேர் ஈடுபட்டு வருவதாக கூறியிருந்தனர்.

நேற்று அதிகாலை நிலவரப்படி, இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. நூற்றுக்கும் அதிகமானவர்கள் காணாமல் போனதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்கள் உயிருடனோ, இறந்த நிலையிலோ கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என கருதப்படும் நிலையில் அப்பகுதிக்கு கூடுதலாக மீட்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 33 பேர் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய சேதம் உள்ளூர் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று அதிபராக பொறுப்பேற்றுள்ள மா யிங்-ஜியோ நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் சென்று ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவுள்ளார்.

கடந்த 1999-ம் ஆண்டு தைவானை தாக்கிய 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு சுமார் 2400 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

_88148704_88148703