எம்.எம்.ஜபீர், ஹாசிப் யாஸின்
பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டுக்கழகத்தின் வீரர்கள் இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்டு விளையாடி வருவதையிட்டு அவ்வீரர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு புனித லூசியா மகா வித்தியாலய மண்டபத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கௌரவ அதிதியாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் ஆகியோருக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வன்னி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் பெரு வரவேற்பு வழங்கப்பட்டது.
பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு கழகத்தின் தலைவர் யூ.அன்டன் பிகிறாடோ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு விளையாடி வரும் வீரர்களான ஆர்.ஜேம்ஸ் எடிசன் பிகிறாடோ மற்றும் சகாயம் கொட்வின் ஆகியோர் பிரதி அமைச்சர் ஹரீஸினால் நினைவுச் சின்னம் வழங்கி, பொன்னாடை போர்த்`தி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதேச மக்களினால் நினைவுச் சின்னம் வழங்கி, பென்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முத்தலிபா பாறூக், வட மாகாண சபை உறுப்பினர் எச்.எஸ்.றயீஸ், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பீ.பாகரன், புனித லூசியா தேவாலயத்தின் பங்குதந்தை ஸ்டீபன் ராஜா, பிரதேச மக்கள், விளையாட்டுக்கழக பிரநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.