நான் உட்பட முஸ்லிம் காங்கிரஸ் சார்ந்து எழுதுகின்ற கட்டுரையாளர்கள் முஸ்லிம் சமூகம் சார்பான கருத்துக்களை உணர்புபூர்வமாக எழுதுகின்றனர் !

எனது பதில் கட்டுரை  – முஹம்மத் இக்பால் 

“ரிசாத் பதியுதீனை விமர்சித்து கட்டுரை எழுதிய இக்பாலுக்கு ஹக்கீம், ஹரீஸ் கொடுத்த சன்மானம்” என்ற தலைப்பில் சில வெப்தளங்களில் காழ்ப்புணர்ச்சி கொண்டு என்னைப்பற்றி எழுதிய கட்டுரை ஒன்றினை படித்தேன். 

அதில் கிழக்குமாகான கராத்தே சம்மேளனத்துக்கு விளையாட்டு பிரதி அமைச்சரின் சிபாரிசின் பேரில் தலைவர் பதவி எனக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

எந்தவொரு விளையாட்டு சம்மேளனத்துக்கும் அரசியல் செல்வாக்கின் மூலம் பதவியினை பெறமுடியுமென்றால், ஸ்ரீ லங்கன் கிரிகெட் சபைக்கு எப்பவோ அர்ஜுனா ரணதூங்க தலைவராகியிருப்பார். மகிந்தவினதும், இன்றைய ஆட்சியிலும் அமைச்சராக இருந்தும் தனது லட்சிய பதவியான கிரிக்கட் சபை தலைவர் பதவியினை அர்ஜூனாவால் இதுவரையில் அடையமுடியாமல் போனதுக்கு என்ன காரணம் என்ற அறிவு, குறித்த கட்டுரையாளருக்கு இருக்க வாய்ப்பில்லை.

hakeem harees

கட்டுரை எழுதுபவர்களுக்கு அது சம்பந்தமாக போதிய அறிவு இருக்கவேண்டும். அறிவு இல்லாதநிலையில் குறித்த கட்டுரையாளர் ரிசாத் பதியுதீனின் ஏவல்களிடமிருந்து என்ன சன்மானத்தை பெற்றுக்கொண்டு இதை எழுதினாரோ அல்லாஹ்தான் அறிவான்.     

1999 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கிழக்கு மாகான கராத்தே சம்மேளனத்தின்  தலைவராக தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இம்முறை நான் தெரிவாகியுள்ளேன். கடந்த 2003 தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரைக்கும் பொது செயலாளராகவும், 2001 தொடக்கம் 2002 வரைக்கும் பொருளாளராகவும், சம்மேளனம் உருவாக்கப்பட்டபோது உபதலைவராகவும் பதவி வகித்துள்ளேன்.

சம்மேளனத்தின் நிருவாகத்தெரிவு ஒரு வருடத்துக் கொருமுறை வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படும். கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலிருந்தும் சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அங்கத்துவ கழகங்களின் கறுப்புப்பட்டி (Black Belt) பெற்ற பிரதிநிதிகள் மட்டுமே வாக்களிக்க தகுதி பெறுவர்.    

கடந்த 2014 தொடக்கம் இன்று வரைக்கும் (National Selection Committee) தேசிய தெரிவுக்குழு உறுப்பினராக பதவி வகிக்கின்றேன். தேசிய குழாமில் உள்ள (National Team) வீரர்களை சர்வதேச கராத்தே போட்டிக்காக தெரிவு செய்து அனுப்புவது எங்களது கடமையாகும். அத்துடன் கடந்த வருடம் டில்லியில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான கராத்தே போட்டியிலும், 2009 ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியிலும் இலங்கையின் பிரதிநிதியாக அரச அனுசரணையில் நான் சென்றிருந்தேன்.   

1995 தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரைக்கும் ஒரு வீரராக பலதரப்பட்ட தேசிய கராத்தே போட்டிகளில் பங்குபற்றியதுடன் ஐந்து வருடங்கள் தேசிய குழாமில் (National Team) இருந்துள்ளேன். அத்துடன் நான் பெற்ற பதக்கங்களை இங்கே குறிப்பிடுவதென்றால் பக்கங்கள் அதிகரித்துவிடும். எனவே எனது இல்லத்துக்கு வந்தால் எனது சான்றிதல்களையும், பதக்கங்களையும் காண்பிக்க முடியும்.  

ஸ்ரீ லங்கா கராத்தே சம்மேளனத்தில் பிரதம போதனாசிரியராகவும் (Chief Instructor), தேசிய சம்மேளன (National Body) அங்கத்தவராகவும், கறுப்புப்பட்டி ஆறாவது தரத்திலும் உள்ளேன். (Black Belt 6th DAN) அத்துடன் நடுவர் (Referee) தரம் “A” சித்தியினை பெற்றுள்ளேன். விளையாட்டுத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு இதனைப்பற்றிய பூரண அறிவு இருக்கும்.  

இப்போ விடயத்துக்கு வருவோம். கிழக்கு மாகான கராத்தே சம்மேளனத்தில் வாக்குரிமையுள்ள ஒரே ஒரு முஸ்லிம் உறுப்பினர் நான் மட்டுமே. ஏனைய அனைவரும் தமிழ், சிங்கள் சகோதரர்களாவார்கள். நடைபெற்ற சம்மேளன தேர்தலில் சிங்கள, தமிழ் அங்கத்தவர்களின் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன். இதற்கும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சருக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? 

அப்படித்தான் வைத்துக்கொண்டாலும் அவர் எப்போது அமைச்சரானார்? அவர் அமைச்சராவதற்கு முன்பு இரண்டு தடவைகள் தலைவராகவும், பத்து தடவைகள் பொது செயலாளராகவும் நான் வாக்கெடுப்பின்மூலம் வெற்றி பெற்றதற்கு யார் காரணம்? எனக்கு தலைவர் பதவி கிடைத்ததனால் சிலர் அதிருப்தி அடைந்தார்களாம் அவர்கள் யாரென்று கூறமுடியுமா? 

அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களை தனிப்பட்ட ரீதியில் நான் விமர்சித்ததில்லை. சமூகம் சார்ந்தும், அவரது அரசியல் பிழைகளையும் சுட்டிக்காட்டியுள்ளேன். அவரது சன்மானத்தினை பெற்று ஏப்பமிடுபவர்களுக்கு அமைச்சர் ரிசாத்தின் அரசியல் பிழைகளை அறிந்துகொள்ள வாய்ப்பில்லை. அத்துடன் கடந்தகால வரலாறுகளையும் கூறியுள்ளேன். ஆதாராம் இல்லாமல் எதனையும் கூறவில்லை. எனது கட்டுரையில் ஏதாவது இட்டுக்கட்டப்பட்டிருப்பதாக நினைத்தால் அது சம்பந்தமாக விவாதிக்க நான் தயாராக உள்ளேன். 

அத்துடன் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வேண்டும் என்பதில் நான் மட்டுமல்ல தலைவர் ஹகீம் அவர்களும் மிகவும் ஆர்வமாக உள்ளார். அதன் முழு அதிகாரமும் ஐ.தே.கட்சியிடம் உள்ளது. பல தடவைகள் அது சம்பந்தமாக அழுத்தம் வழங்கியும் இன்னும் ஒன்றும் நடைபெறவில்லை. சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயத்தில் தலைவர் ஹக்கீமை விமர்சிக்கின்றவர்கள், ஏன் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கமைய அவர் மூலமாக சபையை பெற முயற்சிக்கவில்லை. 

நான் உட்பட முஸ்லிம் காங்கிரஸ் சார்ந்து எழுதுகின்ற கட்டுரையாளர்கள் முஸ்லிம் சமூகம் சார்பான கருத்துக்களை உணர்புபூர்வமாக எழுதுகின்றனரே தவிர யாருடைய சலுகைகளுக்காகவும், பதவிகளுக்காகவும் எழுதவில்லை. சலுகைகளை பெற்றுக்கொண்டு ரிசாத் பதியுதீன் எண்ணும் தனிநபருக்காக கட்டுரை என்ற பெயரில் புகழ்பாடுகின்றவர்கள் அவர்களது பாணியில் சிதிக்கின்றார்கள். அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. 

எனவே வாக்கெடுப்பின் மூலமாக தெரிவு செய்யப்படுகின்ற ஒரு பதவியினை அரசியல்வாதிகள் மூலமாக பெற்றுக்கொண்டேன் என்று முட்டாள்தனமாக எழுதியதனால், கராத்தேயில் எனக்கு உள்ள தகுதியினை பற்றி கூறுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. அதற்காக என்னை விமர்சித்த கட்டுரையாளருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.    

 

ரிசாட் பதியுதீனை விமர்சித்து கட்டுரை எழுதிய இக்பாலுக்கு ஹக்கீம் , ஹரீஸ் கொடுத்த சன்மானம் !