யாருக்கு சுதந்திரம்? ஆங்கிலயேர்களினதும், சிங்களவர்களினதும் ஆட்சியில் சிறுபான்மையினர்கள் பெற்ற சுதந்திரம் என்ன?

 

ds 1948 independenet

இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. இதே தினத்தில் 1948 ஆம் ஆண்டு எமது நாட்டுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டதாக உத்தியோக பூர்வ பிரகடனம் செய்யப்பட்டது. அதனாலேயே இத்தினத்தினை கொண்டாடுகின்றோம்.  

எமது அயல் நாடான இந்தியாவையும், இலங்கையும் ஆங்கிலேயர்கள் கைப்பேற்றி ஆட்சிசெய்ததனால், சுதந்திரத்துக்காக இலங்கயர்களைவிட இந்தியர்களாலேயே பாரியளவில் போராட்டம் அவர்களது நாட்டில் நடாத்தப்பட்டது. இந்தியர்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கும் தலைசாய்த்தும், இரண்டாவது உலகமகா யுத்தம் முடிவடைந்த நிலையிலும் 1947 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு முதலில் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது.

அதன் தாக்கத்தினாலேயே இலங்கைக்கும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்டது. இந்தியர்கள் இடைவிடாது மூர்க்கமாக போராட்டம் நடத்தாது விட்டிருந்தால் இந்தியாவின் சுதந்திரம் பிற்போடப்பட்டிருக்கும். அதேவேளை குறித்த தினத்தில் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருக்குமா என்ற கேள்வியும் எழுகின்றது.

சுதந்திரம் என்னும்பொழுது நாங்கள் அன்று ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்தோம் என்பதுதான் பொருள்படும். இங்கே ஒரு விடயத்தினை நாங்கள் சிந்திக்க வேண்டும். அதாவது ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை கைப்பேற்றி ஆட்சி செய்யாது விட்டிருந்தால் இந்நாட்டின் உட்கட்டமைப்பு இன்றுள்ள நிலையிலும் பார்க்க எவ்வளவோ பின்னோக்கி இருந்திருக்கும். 

எம்மை அடிமைப்படுத்தி எமது நாட்டின் வளங்களை ஆங்கிலேயர்கள் சுரண்டிச்செல்வதனை தடுப்பதுடன், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறவேண்டும் என்ற கோசம் மட்டுமே அப்போது மக்களிடம் முன்வைக்கப்பட்டது. சிறுபான்மயினர்களை பொறுத்தவரையில் சுதந்திரத்துக்கு பின்பு நாங்கள் ஒரு பேச்சுக்காக ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்றோம் என்று பெருமைப்படுகின்றோமே தவிர, என்ன விடுதலை, யாருக்கு சுதந்திரம்  என்று யாரும் சிந்திப்பதில்லை.  

ஆங்கிலேயர்களினால் உருவாக்கப்பட்ட போக்குவரத்து பாதைகளும், புகையிரதப்பாதைகளும், மற்றும் நிருவாக முறைமைகளுமே இன்றும் நடைமுறையிலிருந்து வருகின்றது. அவர்கள் இன்னும் பத்து அல்லது இருபது வருடங்கள் இந்நாட்டினை ஆட்சி செய்திருந்தால் இந்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் அளவுக்கு அபிவிருத்தி அடைந்திருக்கும்.     

இவைகளெல்லாம் ஒருபுறமிருக்க, சுதந்திரத்துக்கு பின்பு இந்நாட்டின் சிறுபான்மை இனமான தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் சுதந்திரம் எவ்வாறு உள்ளது? ஆங்கிலயர்களையும்விட சிங்களவர்கள் எவ்வாறு அரசியல் சுதந்திரத்தினை வழங்கியுள்ளார்கள் என்று நாங்கள் சிந்திக்கின்றோமா? 

ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் என்ற போர்வையில் அதிகாரத்தினை பெற்றுக்கொள்ளும் வரைக்கும், தமிழ், முஸ்லிம் தலைவர்களை திருப்தி படுத்தும் வகையில் அவர்கள் விருப்பத்துக்கேற்ப தலைசாய்த்தார்கள். அத்துடன் தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள், சிங்கள பிரதேசங்களையும் விட கூடுதலாக அபிவிருத்தி செய்யப்பட்டது. இதனால் சிங்கள தலைவர்களை சிறுபான்மை தலைவர்கள் நம்பினார்கள். ஆனால் சுதந்திரம் என்ற போர்வையில் இந்நாட்டின் ஏகபோக முழு அதிகாரங்களும் சிங்களவர்களின் கைகளுக்கு கிடைத்த பின்பு அனைத்தும் தலைகீழாக மாறியது.  

சுதந்திரத்துக்கு முன்பு சிறுபான்மை பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் சுதந்திரத்துக்கு பின்பு இடைநடுவில் கைவிடப்பட்டது. அத்துடன் மலையக தமிழ் மக்களின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டது. 

அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளை குறிவைத்து அவர்களது இனப்பரம்பலை சிதறடித்து, அரசியல் அநாதைகளாக்கும் நோக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மணலாறு, அம்பாறை போன்ற பிரதேசங்களில் உருவாக்கப்பட்டது. 

இந்த திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தின் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களின் விகிதாசாரம் குறைந்து சிங்களவர்களின் விகிதாசாரம் அதிகரிக்கப்பட்டது. அதேபோல அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் விகிதாசாரத்துக்கு சமனாக சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டது. 

விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் இல்லாதிருந்திருந்தால் வடகிழக்கில் இன்று தமிழ், முஸ்லிம் மக்களின் இனவிகிதாசாரம் இன்றைய நிலையிலும் பார்க்க அதிகமான வேறுபாட்டை கொண்டிருக்கும். அதாவது வடகிழக்கில் சிங்களவர்களே பெரும்பான்மையினராக இருந்திருப்பார்கள். 

அனைத்து துறைகளிலும் பாரபற்சமும், மாற்றாந்தாய் மனப்பான்மையும், அடக்குமுறைகளும் சிங்களவர்களினால் மேற்கொள்ளப்பட்டதனால் தமிழ் தலைவர்கள் அரசியல் போராட்டத்தினை மேற்கொண்டார்கள். அது அடக்கப்பட்டதனால் வேறு வழியின்றி தங்களது உண்மையான சுதந்திரத்தினை வேண்டி ஆயுதப்போராட்டத்தினை மேட்கொண்டார்கள். 

இந்த பாரபட்சம் தமிழர்களுக்கு மட்டுமல்ல. முஸ்லிம் மக்களுக்கும் இருந்தது. தமிழ் தலைவர்கள் அடக்குமுறைக்கு எதிராக வீரத்துடன் போராடினார்கள். ஆனால் அன்றைய முஸ்லிம் தலைவர்கள் சிங்கள தலைவர்களின் அடிமைகளாக இருந்துகொண்டு பதவிகளை மட்டும் அனுபவிக்கும் நோக்கில் பேசாமடந்தைகளாக இருந்தார்கள். இதனால் இந்நாட்டின் முஸ்லிம் சமூகம் அரசியல் அனாதைகளாக சிங்கள கட்சிகளிலும், தமிழ் கட்சிகளிலும் சிதறிக்கிடந்தனர்.   

இன்று கொண்டாடப்படுகின்ற சுதந்திரம் சிங்கள மக்களுக்குரியதே, தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரான நாங்க ஆங்கிலயர்களது ஆட்சியியையும், சிங்களவர்களது ஆட்சியையும் ஒப்பிட்டுப்பார்க்கையில் ஆங்கிலயர்களது ஆட்சி பருவாயில்லை என்ற நிலையே காணப்பட்டது. 

எனவே சிறுபான்மையினரான எங்களுக்கு அரசியல் உரிமைகள் எப்பொழுது வளங்கப்படுகின்றதோ, அன்றிலிருந்துதான் உண்மையான சுதந்திரத்தினை நாங்கள் கொண்டாட முடியும். இது சிங்களவர்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரமே அன்றி எங்களுக்கல்ல. அன்று ஆங்கிலயர்களுக்கு அடிமையாக இருந்ததுபோன்று, இன்று சிங்களவர்களுக்கு அடிமையாக இருக்கின்றோம். இதில் எந்த வேறுபாடுகளும் இல்லை என்பதனை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.        

 

முகம்மத் இக்பால்    iqbal sainthamaruthu

சாய்ந்தமருது