டக்வொர்த் லூயிஸ் முறையில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இங்கிலாந்து !

233345

 

 தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராய், ஹேல்ஸ் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்கள். ராய் 30 பந்தில் 48 ரன்களும், ஹேல்ஸ் 47 பந்தில் 57 ரன்களும் சேர்த்தனர்.

அதன்பின் வந்த ஜோ ரூட் தன் பங்குக்கு 52 ரன்கள் சேர்த்தார். 4-வது வீரராக களம் இறங்கிய விக்கெட் கீப்பர் பட்லர் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 76 பந்தில் 11 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 105 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 38 பந்தில் 57 ரன்கள் விளாசினார். 3 பேர் அரைசதமும், ஒருவர் சதமும் அடிக்க இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் கிறிஸ் மோரிஸ் 10 ஓவர்கள் வீசி 74 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். டி லங்கே 87 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இம்ரான் தாஹிர் 71 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

233371
400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர்களான டி காக், அம்லா இருவரும் களமிறங்கினர். ஒரு பக்கம் டி காக், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, அம்லாவோ, களத்தில் 6 நிமிடம் மட்டுமே தாக்குப்பிடித்து 6 ரன்களுடன் அவுட்டானார். அம்லாவுக்கு அடுத்து வந்த பலரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ப்ளெசிஸ் மட்டுமே நிலைத்து நின்று ஆடினார். 

இருப்பினும், டி காக்குக்கு யாராவது கை கொடுத்தால் போதும் எப்படியும் ஜெயித்து விடலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், எதிர்பாராத விதமாக 33.3 வது ஓவரில் மழை குறுக்கிட்டது. அப்போது, 96 பந்துகளை மட்டுமே சந்தித்த டி காக் 138 ரன்களுடனும் பெகர்டியன் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மழை காரணமாக டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 39 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

233373