நிர்ப்பந்தத்தால் ஓய்வு முடிவை எடுத்தேன் – சந்தர்பால் விளக்கம் !

chandrapaul

ஓய்வு பெற்றால் மட்டுமே மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் கலந்து கொள்ள தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் என்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் மறைமுக நிர்ப்பந்தம் காரணமாகவே ஓய்வு முடிவை எடுத்ததாக சந்தர்பால் கூறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்காக 20 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடியவர் சந்தர்பால். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அவரை நிரந்தரமாக ஓரங்கட்டியது. மேலும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் கடந்த மாதம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக டெஸ்டுகளில் (164) ஆடியவர் என்ற பெருமைக்குரியவர்.

இந்த நிலையில் தனது ஓய்வு விவகாரம் குறித்து 41 வயதான சந்தர்பால் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் பங்கேற்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் எனக்கு தடையில்லா சான்றிதழை வழங்கியது. ஜனவரி 23-ந்தேதி நான் அதிகாரபூர்வமாக ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட பிறகே அந்த சான்றிதழை கொடுத்தார்கள். நான் ஓய்வு பெற்றிருக்காவிட்டால் அவர்கள் எனக்கு அந்த சான்றிதழை தந்து இருக்கமாட்டார்கள்.

கடைசி வாய்ப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் விளையாடி விட்டு விடைபெற்று விடலாம் என்று ஆசைப்பட்டேன். அது நடக்கவில்லை. ஆனால் இந்த விஷயத்தில் நானாக எதுவும் செய்ய முடியாது. இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவும் விரும்பவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக நீண்ட காலம் விளையாடியிருக்கும் என்னை, இதை விட நன்றாக நடத்தியிருக்க வேண்டும் என்பதே எனது உணர்வு. என்னை போன்ற ஒரு வீரரையே இது போன்று நடத்துகிறார்கள் என்றால், எதிர்கால இளம் வீரர்களை எப்படி நடத்துவார்கள் என்பதை யோசித்து பாருங்கள்? இது மோசமான அறிகுறி அல்லவா?

சாதாரண பள்ளி மாணவர்கள் போல் நடத்தி விட்டார்கள். வீரர்களின் தன்மை குறித்து எடுத்துச் சொல்வதற்கு இங்கு யாரும் இல்லை. அந்த வழியில் தான் நீங்கள் நடத்தப்படுவீர்கள். இந்த கதை தொடரும்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறேனே தவிர உள்ளூர் போட்டியில் அல்ல. தொடர்ந்து விளையாட வேண்டும் என்ற வேட்கை இன்னும் எனக்குள் இருக்கிறது. அதனால் கயானா அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாட உள்ளேன். இது தொடர்பாக கயானா அணி நிர்வாகத்திடம் ஏற்கனவே பேசி விட்டேன்.

இவ்வாறு சந்தர்பால் கூறியுள்ளார்.