ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட சேப்பல்- ஹெட்லி டிராபி இன்று நியூசிலாந்தில் உள்ள ஆக்கலாந்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் குப்தில் 90 ரன்னும், நிக்கோல்ஸ் 61 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் 308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 148 ரன்னில் சுருண்டது. இதனால் நியூசிலாந்து 159 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது பெரிய விஷயம் அல்ல. அந்த அணியால் 24.2 ஓவர்கள் மட்டுமே தாக்குபிடிக்க முடிந்தது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் குறைந்த ஓவரில் ஆல் அவுட் ஆனது என்ற மோசமான சாதனையை ஆஸ்திரேலியா அணி பெற்றுள்ளது.
இதற்கு முன் கடந்த 1977-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான எட்ஜ்பாஸ்டனில் 25.2 (152 பந்துகள்) ஓவரில் ஆல் அவுட் ஆகியிருந்தது. 1986-ம் ஆண்டு அடிலெய்டில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிராக 26.3 (159 பந்துகள்) ஓவரில் ஆல் அவுட் ஆகியிருந்தது. தற்போது 24.2 (146 பந்துகள்) ஓவரில் ஆல் அவுட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.