நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தில் தமிழ் பாடம் இடம்பெறாமையால் மாணவர்கள் தவிப்பு, பெற்றோர்கள் அங்கலாய்ப்பு !

received_1092681177431306_Fotor

சுலைமான் றாபி

 கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்குற்பட்ட நிந்தவூர் அல் –  மதீனா மகா வித்தியாலயத்தின்  உயர்தரப் பிரிவில் சுமார் ஒரு மாத காலத்திற்கும் மேலாக தமிழ் பாடம் இடம்பெறாமையால் கலைத்துறை உயர்தரப்பிரிவு மாணவர்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அன்றாடம் பாடசாலை செல்லும் மாணவர்கள் முக்கிய பாடமான தமிழ் பாடம் இடம்பெறாததால் விடுமுறை எடுத்துக் கொண்டு தங்கள் வீடுகளில் தங்கிக்கொள்ளும் துர்ப்பாக்கிய நிலையும்  ஏற்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட பாடசாலையில் தமிழ் பாடத்தினை போதித்து வந்த ஆசிரியர் பிறிதொரு பாடசாலைக்கு இவ்வருடம் முதல் இடமாற்றம் பெற்றுச் சென்ற போதும் அவரின் இடத்திற்கு இதுவரைக்கும் எந்த ஆசிரியரும் நியமிக்கப்படாததால் இவ்வாறனதொரு நிலைமை உருவாகியிருப்பதோடு இப்பாடசாலையில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கவலையடைந்துள்ளனர். 

இது தவிர குறிப்பிட்ட ஆசிரியரின் இடமாற்றப் பின்னணியில் பல்வேறு குழறுபடிகள் நிலவுவதோடு, அவரின் இடத்திற்கு பிறிதொரு ஆசிரியரை நியமிக்கும் விடயத்தில் நிந்தவூர் கோட்டக் கல்விப்பணிப்பாளர், கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் மற்றும் மாகாணக் கல்விப்பணிப்பாளர் உள்ளிட்டோர்களால் புதிய தமிழ் பாட ஆசிரியர் ஒருவரை நியமிக்க திராணியற்றுக் காணப்படுவதோடு,  இவ்விடயத்தில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் காலங்கடத்துவதாகவும், இதன் மூலம் தங்கள்  பிள்ளைகளின் கல்வித்தரங்கள் பாழாக்கப்படுவதாகவும் பெற்றோர்கள் அங்கலாய்க்கின்றார்கள். இது தவிர ஒரு அரச பாடசாலையொன்றில் மாணவர்களுக்கு இவ்வாறானதொரு நிலைப்பாடு என்றால் அவர்களின் கல்வித்தரங்கள் எவ்வாறு எதிர்காலத்தில் விருத்தியடையும் எனும் கேள்விகளும் பெற்றோர்களிடத்தில் எழுந்துள்ளது.  

இதேவேளை இவ்விடயம் சம்பந்தமாக குறிப்பிட்ட பாடசாலையின் அதிபரினை தொடர்பு கொண்டு கேட்ட போது : 

குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக நிந்தவூர் கோட்டக் கல்விப்பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு தாம் கொண்டு வந்த போதும், இதுவரைக்கும் எவ்வித சாதகமான முடிவுகளும் தமது பாடசாலைக்குக் கிடைக்கவில்லையெனத்தெரிவித்தார்.  

இதேவேளை நிந்தவூரில் காணப்படும் முக்கிய பாடசாலைகளில் ஒன்றான அல்-மதீனா மகா வித்தியாலயமானது கடந்த 2012ம் ஆண்டு உயர்தரப் பிரிவினை ஆரம்பித்து இதில் பல்வேறு சாதனைகளைப் படைத்ததோடு இந்தப் பாடசாலையின் மூலமாக அதிக மாணவர்கள் பல்கலைக் கழகப்பிரவேசங்களையும் பெற்றுக் கொண்டார்கள். மேலும் குறிப்பிட்ட இப்பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய எஸ்.அஹமது அவர்கள் சென்ற ஜனவரி மாதம் 03ம் திகதி தனது அதிபர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.