நாடு முழுவதும் 2½ கோடி வழக்குகள் தேக்கம் !

நாடு முழுவதும் உள்ள கீழ்க்கோர்ட்டுகளில் 2½ கோடி வழக்குகள் தேங்கி கிடப்பதாக மத்திய சட்ட அமைச்சகம் தகவல் வெளியிட்டு உள்ளது.

570607-CourtJudgeJustice-1372617557-583-640x480
இந்தியா முழுவதும் உள்ள கீழ்க்கோர்ட்டுகள், ஐகோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டுகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட குறைவான எண்ணிக்கையிலேயே நீதிபதிகள் பணியில் உள்ளனர். இதனால் பெரும்பாலான கோர்ட்டுகளில் நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது.

இந்த நிலையில் கோர்ட்டுகளில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் அந்த கோர்ட்டுகளில் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறித்து மத்திய சட்ட அமைச்சகத்தின் நீதிபதிகளுக்கான துறை கணக்கெடுத்து தகவல் வெளியிட்டு உள்ளது.

அதன்படி, கீழ்க்கோர்ட்டுகளில் கடந்த 2012-ம் ஆண்டு நிலவரப்படி 17 ஆயிரத்து 715 ஆக இருந்த அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை, 2014-ம் ஆண்டு டிசம்பரில் 20 ஆயிரத்து 214 ஆக உயர்த்தப்பட்டது. ஆனாலும் கீழ்க்கோர்ட்டுகளில் தற்போதும் ஏராளமான நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி கணக்குப்படி நாடு முழுவதும் உள்ள கீழ்க்கோர்ட்டுகளில் 4 ஆயிரத்து 580 பணியிடம் காலியாக உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. இது அனுமதிக்கப்பட்ட இடங்களில் 22.66 சதவீதம் ஆகும்.

இதனால் இந்த கோர்ட்டுகளில் 2.64 கோடி வழக்குகள் தேங்கியுள்ளன. எனினும் இந்த கோர்ட்டுகள் கடந்த 2014-ம் ஆண்டு மட்டுமே சுமார் 2 கோடி வழக்குகளை முடித்து வைத்துள்ளன.

இந்திய அரசியல் சட்டப்படி கீழ்க்கோர்ட்டுகளில் நீதிபதிகளை நியமனம் செய்வது, அந்தந்த மாநில அரசுகள் மற்றும் மாநில ஐகோர்ட்டுகளின் பணியாகும்.

இதைப்போல நாடு முழுவதும் உள்ள 24 ஐகோர்ட்டுகளிலும் நீதிபதிகளின் எண்ணிக்கையை 25 சதவீதம் அதிகரித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. எனினும் இந்த கோர்ட்டுகளிலும் ஏராளமான பணியிடங்கள் இன்னும் காலியாகவே உள்ளன.

இந்த கோர்ட்டுகள் கடந்த 2014-ம் ஆண்டில் 17.35 லட்சம் வழக்குகளை முடித்து வைத்துள்ளன. எனினும் 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி கணக்குப்படி, இந்த கோர்ட்டுகளில் 41.53 லட்சம் வழக்குகள் இன்னும் தேங்கியே கிடக்கின்றன.

சுப்ரீம் கோர்ட்டிலும் கடந்த மாதம் 1-ந் தேதி நிலவரப்படி 5 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது. இந்த கோர்ட்டிலும் கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி 58 ஆயிரத்து 906 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.