தெ.கி. பல்கலைக்கழக பொறியியல் பீட பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர உதவியவர் அமைச்சர் றிஷாட் மட்டுமே: லகஷ்மன் கிரியெல்ல

seusl
தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என விடாப்பிடியாக நின்று அந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர உதவியவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மட்டுமே என உயர் கல்வி அமைச்சர் லகஷ்மன் கிரியெல்ல நேற்று தெரிவித்தார்.
 
தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட பிரச்சினை தொடர்பாக அமைச்சர் கிரியெல்லவிடம் கண்டி ஊடகவியலாளர்கள் கேள்விiயான்றை எழுப்பிய போதே அமைச்சர் இவ்வாறான கருத்தை வெளியிட்டார்.
 
“பொறியியல் பீடம் ஒருபோதும் மூடப்பட மாட்டாது. அதனை சீராக இயங்கச் செய்வதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. பொறியியல் பீட மாணவர்களின் பிரச்சினை எழுந்த போது அமைச்சர் றிஷாட் பதியுதீன் என்னிடம் வந்து இதன் ஆழத்தை தெரிவித்தார். வேறு எந்த அரசியல்வாதியும் இது தொடர்பில் என் கவனத்துக்கு கொண்டுவரவில்லை. அமைச்சர் றிஷாட் இது தொடர்பில் எமக்கு தெளிவுபடுத்தி பொறியியல் பீட மாணவர்களின் கல்வி செயன்முறைகளுக்கு உதவும் வகையில் தனது அமைச்சின் ஊடாக கைத்தொழில் பேட்டை ஒன்றை அமைத்துத் தருவதாகவும் வாக்களித்தார். சமூகத்தின் மீதான அவரின் உண்மையான பற்றுதலை நான் அடையாளம் கண்டுகொண்டேன். அவரை நான் பாராட்டுகின்றேன். அவர் ஒரு துடிப்பானவர்” என்றும் தெரிவித்தார்.
 
தென்கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களை பாராளுமன்றத்துக்கு வரவழைத்து பிரதமர் மற்றும் என்னுடனும் சந்திப்பொன்றை ஏற்படுத்தித் தந்தவர். பல்கலைக்கழக மாணவர்களின் குறைபாடுகளை நாம் அறிய வாய்ப்பை உருவாக்கித் தந்தவர்.
 
நல்லாட்சி அரசாங்கம் உருவாகுவதற்கு பங்களித்தவர். முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் சலுகைகளுக்காக நல்லாட்சிக்கு உதவ முன்வந்த போதும் றிஷாட் தூய்மையான நோக்குடன் இணைந்தவர்.