இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக கிரஹம் போர்ட் !

graham-ford-angelo-mathews

 பெப்ரவரி 01 ஆம் திகதி தனது கடைமைகளை போர்ட் பொறுப்பேற்கின்றார். 45 மாதங்களுக்கு குறித்த பதவியினை இவர் வகிக்கவுள்ளார். கடந்த வருடமே இவர் இந்த பதவியை பொறுபேற்க இருந்த போதும் இலங்கை கிரிக்கெட் முகாமைத்துவ சிக்கல்கள் காரணமாக தனது பதவி நீண்ட நாட்களுக்கு அமைய வேண்டும் என்ற காரணத்தினாலேயே அந்த நேரத்தில் பதவியை பொறுப்பேற்பதில் தாமதம் ஏற்பட்டது.

கிராஹம் போர்ட்டின் நியமனம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் உத்தியோகபூர்வ அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக கிரஹம் போர்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கை கிரிக்கெட் அணிக்காக ஏற்கனவே 2012 ஜனவரி தொடக்கம் 2014 ஜனவரி வரை கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து, சரே பிராந்திய அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிவரும் இவர் குமார் சங்கக்காரவின் உந்துதலின் மூலமும் அவரின் இணைப்பின் மூலமுமே இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக இணைக்கப்பட்டார் என நம்பப்படுகின்றது குமார் சங்கக்கார ஓய்வின் பின்னர் சரே அணிக்காக விளையாடி வருகின்றார். கிரஹம் போர்ட் கடந்த வருடம் ஜூன் மாதமளவில் இணைவதற்கான வாய்புகள் இருந்த போதும் இலங்கை அரசியல் மாற்றம், இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாக மாற்றங்கள் என்பனவற்றின் காரணமாக அவரை நியமிக்கவில்லை. இப்போது சுமூகமான நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இவர் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் ஆபிரிக்காவை சேர்ந்த இவர் ஒரு துடுப்பாட்ட வீரர். முதற் தர போட்டிகளில் கூட இவர் பிரகாசிக்கவில்லை. சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றியதே இல்லை. 7 முதற் தரப் போட்டிகளில் 13 இன்னிங்சில் 162 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளார்.

1992 ஆம் ஆண்டு பயிற்றுவிப்பாளராக தனது பணியை தொடங்கிய போர்ட் 1999 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்கா அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளாரக கடமையாற்றி உலக கிண்ண தொடரின் பின் தென் ஆபிரிக்கா அணியின் பயிற்றுவிப்பாளாரக பொறுப்பேற்றார்.

2002 ஆம் ஆண்டு தனது பதவியை இழந்த போர்ட் முகாமைத்துவ பதவிகளை வகித்து பின் 2012 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் பதவியைப் பெற்றார். மீண்டும் மூன்றாவது முறையாக சர்வதேசப் பயிற்றுவிப்பாளர் பதவியை இவர் பெற்றுள்ளார்.