ஹரீஸ் தலைமையிலான விளையாட்டு விழாவில் கல்முனை மாநகர சபை திட்டமிட்டு புறக்கணிப்பு !

அஸ்லம் எஸ் மௌலானா 
 
 
விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய தேசிய வாரத்தின் இறுதித் தினமான இன்று (30) சனிக்கிழமை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் கல்முனையில் இடம்பெற்று வருகின்ற விளையாட்டு விழாவில் கல்முனை மாநகர சபை முற்றாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
 
 
இது தொடர்பில் மாநகர முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
 

?

 
“தேகாரோக்கிய வாரத்தின் இறுதித் தினமான இன்று சனிக்கிழமை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் காலை முதல் மாலை வரை இடம்பெற்று வருகின்றன.
 
 
இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் கௌரவ பிரதி அமைச்சர் ஹரீஸ் அவர்களது ஏற்பாட்டில் கல்முனை மாநகர சபை எல்லைக்குள்ளேயே இடம்பெறுகின்றன.
இதற்கு தேவயான மைதான ஒழுங்குகள் முதல் அனைத்து துப்பரவுப் பணிகளும் கல்முனை மாநகர சபையாலேயே முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையிலும் இப்பிரதேசத்திலுள்ள பல்வேறு அரச நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ள நிலையிலும் கல்முனை மாநகர சபையின் உத்தியோகத்தர்களுக்கோ ஊழியர்களுக்கோ இந்நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
 
 
இதற்கான ஏற்பாடுகளின்போது கல்முனை மாநகர ஆணையாளரால், பிரதேச விளையாட்டு உத்தியோகத்தரிடம் இதில் பங்குபற்றுவதற்கான விருப்பம் தெரிவிக்கப்பட்டு, வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
 
 
கல்முனை மாநகர சபையில் பல்வேறு துறைசார்ந்த விளையாட்டு வீரர்கள் அடங்கிய அணிகள் உள்ளன என்றும் அவற்றையும் குறித்த விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளில் இணைத்துக் கொள்ளுமாறும் ஆணையாளரினால் கோரிக்கை விடுக்கப்பட்டும் இவ்வாறு திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டிருப்பதானது மிகவும் கவலைக்கும் கண்டனத்திற்குமுரிய விடயமாகும். இது எமக்கு பாரிய சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.
 
 
ஆகையினால் இது தொடர்பில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், உடனடியாக கவனம் செலுத்தி, சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் எதிர்காலங்களிலாவது எவருக்கும் இவ்வாறான அநீதிகள் இடம்பெறாதிருக்க உறுதி செய்யுமாறு வேண்டுகின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.