இலங்கை மீது யுத்த குற்றச்சாட்டுகள் எவையும் சுமத்தப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்ஜசீராவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் இலங்கை குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்டவிசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை அவர் நிராகரித்துள்ளார். அல்ஜசீராவின் ஹொடா அப்தெல் ஹமீத்திற்கா பேட்டியில் இலங்கை ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது.
இலங்கை மீது யுத்தகுற்றச்சாட்டுகள் எதுவும் இல்லையென நான் தெளிவாக தெரிவிக்கவேண்டும், ஆரம்பகட்டத்தில் யுத்த குற்றச்சாட்டுகள் காணப்பட்டன, எனினும் கடந்த வருடம் ஜெனீவாவில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களில் எம்மீது யுத்த குற்றச்சாட்டுகள் எவையும் சுமத்தப்படவில்லை.
அந்த அறிக்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் மாத்திரம் காணப்படுகி;ன்றன,மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் காணப்படும் விடயங்களை கருத்தில்எடுத்தீர்கள் என்றால் ஐக்கியநாடுகளின் உறுப்பு நாடு என்ற வகையில் முக்கிய விடயங்களை யோசனைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்,
யுத்தம் இடம்பெற்றவேளை குற்றமிழைத்தவர்களை விசாரணை செய்வது குறித்து நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம், ஆனால் நான் வெளிநாட்டு தலையீட்டை எதிர்க்கின்றேன்,நாங்கள் எப்போதும் எங்கள் நாட்டின் இறைமை மற்றும் அரசமைப்பிற்கு ஏற்ற வகையில் செயற்படுவோம். இதற்காக சில வெளிநாட்டு தொழி;ல்நுட்பங்களை பயன்படுத்துவோம், எனினும் நிச்சயமாக எங்களிற்கு வெளியாட்கள் அவசியமில்லை,
நீதிவழங்கும் செயற்பாடுகளை மிகவேகமாக முன்னெடுப்பதற்கான வாய்ப்பில்லை, நாங்கள் இந்த நாட்டின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து அதனை விடுவிக்கமுயல்கின்றோம்,இதற்காக நாங்கள் உண்மையை எதிர்கொள்ளவேண்டியுள்ளது இதற்காக பொறுப்புக்கூறலை முன்னெடுக்கவேண்டியுள்ளது.என அவர் குறிப்பி;ட்டுள்ளார்.