போலிக்குற்றசாட்டினை முன்வைத்து எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முனைகின்றனர்: ஏ எம் தில்சாத்

சாய்ந்தமருது 2ஆம் பிரிவு கடற்கரை சிறுவர் பூங்கா விவகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ எம் தில்சாத் அதிரடி அறிக்கை சில்லறை அரசியல் வாதிகளின் போலியான புகார்களுக்கு ஒரு போதும் அஞ்சப்போவதில்லை! 

 

ஜி.முஹம்மட் றின்ஸாத் 

என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு அரசியல்வாதி சில சதி முயற்சிகளை மேற்கொண்டு நான் முன்னெடுக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முடக்க முயற்சிக்கின்றார் என கல்முனை தொகுதி இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ எம் தில்சாத் தெரிவித்துள்ளார்.

 

சாய்ந்தமருதில் இடம்பெறும் ‘சிரம சக்தி’ அபிவிருத்தி தொடர்பில் விளக்கமளித்து இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

“எனது இளைஞர் பாராளுமன்ற உறுப்புரிமை காலத்தில் எமது கல்முனைத் தொகுதி இளைஞர்களுக்கு சிறப்பாக பனியாற்றும் வகையில் எனது கன்னி முயற்சியாக சிரம சக்தி வேலை திட்டத்தின் கீழ் சாந்தமருது பொலிவேரியன் பொது விளையாட்டு மைதானத்தில் கடின பந்து பயிற்சி கூடம் மற்றும் கரப்பந்தாட்ட விளையாட்டு மைதானம் என்பவற்றை அமைப்பதற்கான நிர்மாணப் பணிகளை முன்னெடுத்து வருகின்றேன்.
இதற்கு எமது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் மற்றும் இளைஞர் சேவைகள் அதிகாரி போன்றோர் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர்.

அதன்பேரில் கரப்பந்தாட்ட மைதான அமைவுக்கு புறம்பாக அமைக்கவுள்ள ஒரு பக்க வேலிக்கு தேவையான கம்பி வலையை சாய்ந்தமருது இரண்டாம் பிரிவில் கடந்த பல வருடங்களாக அழிவுற்று கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற சிறுவர் பூங்காவில் இருந்து பெறுவதற்காக இளைஞர் சேவைகள் அதிகாரி ஊடாக பிரதேச செயலாளரிடம் நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதற்கிணங்க பிரதேச செயலாளர் அந்த சிறுவர் பூங்காவில் பயனற்றுக்கிடக்கும் கம்பி வலையை கரப்பந்தாட்ட மைதானத்திற்கு வழங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

ஆனால் அது மாநகர சபைக்கு சொந்தமான சொத்து என்றும் அதனை நான் உடைத்து அகற்ற முற்பட்டதாகவும் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் எனக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அத்துடன் சில சிறு பிள்ளைகளைக் கொண்டு ஆர்ப்பாட்டம் ஒன்றையும் அவர் அரங்கேற்றியுள்ளார். இது ஒரு கோழைத்தனமான நடவடிக்கையாகும்.

என் மீது அவர் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக நான் முன்னெடுக்கின்ற அபிவிருத்திப் பணிகளை முடக்குவதற்காகவே இவ்வாறான போலி முறைப்பாட்டைச் செய்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் பிரதேச செயலாளர் மற்றும் இளைஞர் சேவைகள் அதிகாரி போன்றோரின் ஆவணங்களும் குறித்த முறைப்பாடு தொடர்பில் பிரதேச செயலாளர் பொலிசுக்கு கொடுத்துள்ள வாக்குமூலமும் என்னை நிரபராதி என்று நிரூபணம் செய்துள்ளன.

குறித்த அழிவடைந்த பூங்காவில் இருந்த கம்பி வலையை பிரதேச செயலக தொண்டர்களின் உதவியுடன் அங்கிருந்து எடுத்து அதனை பயனுள்ளதாக மாற்றும் வழிமுறையை பிரதேச செயலாளர் கையாண்டார்.

கறல் பிடித்து பராமரிப்பற்று தூர்ந்து போகும் நிலையில் உள்ளதை அகற்றி அவற்றை பயனுள்ளதாக மாற்றும் செயலில் எதுவித தவறும் கிடையாது. அங்கு சென்று பார்க்கும் எல்லோரும் அதனை ஏற்றுக் கொள்வார்கள். பயனற்றுக் கிடக்கும் வளத்தை பயனுள்ளதாக மாற்றும் பிரதேச செயலாளரின் செயற்பாடு குறித்து முட்டாள்தனமாக் கேள்வி எழுப்புகின்றனர்.

நாம் இளைஞர்களை வலுவூட்டி இந்த நாட்டின் சிறந்த பிரஜைகளாக- செயல் வீரர்களாக உருவாக்க முனையும்போது குர்ஆன் மத்ரசாவுக்கு சென்ற பச்சிளம் பாலகர்களை அழைத்து வந்து அவர்களது மனதில் நஞ்சை கலந்து ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் தனது அரசியல் வங்குரோத்து எனும் கேவலத்தை செய்ய சிலர் முனைந்துள்ளனர்.

இங்கு இன்னுமொன்றை சுட்டிகாட்ட விரும்புகிறேன். எதுவித அரசியல் அதிகாரங்களும் இன்றி காணப்படுகின்ற எமது சாய்ந்தமருது மண்ணுக்கு கிடைத்த மிகப்பெரும் சொத்து எமது பிரதேச செயலாளர் ஆவார், அவர் இந்த சமூகத்துக்கு ஒரு முழு அமைச்சரின் செயல்பாடுகளை விட அதிகமான பணிகளை திறம்பட செய்துள்ளார், இன்னமும் அவரிடம் மிகப்பெரும் திட்டங்கள் இருக்கினறன.

அவரின் செயல்பாடு மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் அவரை இடமாற்றி சாய்ந்தமருதுக்கு இருக்கின்றதையும் இல்லாமல் செய்கின்ற பழி பாதக செயலினை செய்ய துடிக்கின்றனர்.
சுனாமி அனர்த்தத்தின் பின் நமக்கொரு பிரதேச செயலகம் இருந்து நமதூரை சேர்ந்த ஒருவர் பிரதேச செயலாளராக இல்லாமல் இருந்த காலத்தினை நினைவுபடுத்தி பாருங்கள்.

சர்வதேச தொண்டு நிறுவனகள் எமது மண்ணில் வந்து குவிந்தன. இன்று பொலிசில் முறைப்பாடு செய்கிறவர்களும் அதிகார அரசியல் பலத்தில் அப்போதும் இருந்தார்கள், நமக்கு வந்ததை எல்லாம் அடுத்தவர்கள் அடுத்த ஊர்களுக்கு கொண்டு செல்லும் போதெல்லாம் வெறுமனே கையகலாதவர்களாக மௌனிகளாக நின்றனர்.

அதே செயலினை தொடர்ந்தும் கையாள முயற்சிக்கின்றனர், இவர்களுக்கு அபிவிருத்தி என்றால் பிடிக்காது, நல்லது செய்வதற்க்கு இவர்களிடம் எந்தவித திட்டமும் இல்லை, அவர்கள் செய்வதுமில்லை. செஇவபன்ருக்கு உதவுவதுமில்லை. செய்ய விடுவதுமில்லை. நாட்டின் சக்தி மிக்க இளைஞர்களாகிய நாம் இவற்றை தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

இவர்களைப் போன்ற கையாலாகாத ஒருவரையே கடந்த இளைஞர் பாராளுமன்ற தேர்தலின்போது உருவாக்க இவர்கள் துடித்தார்கள். அவர்களது அந்த முயற்சி படுதோல்வி அடைந்தது. அதற்கு பழி தீர்ப்பதற்காக என் மீதான போலிக்குற்றசாட்டினை முன்வைத்து எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முனைகின்றனர்.

இன்று இங்கிருக்கின்ற எமது ஊர் அரசியல்வாதிகள் சேவை செய்வதை விட எமது மண்ணுக்கு வரும் சேவைகளை தடுப்பவர்களாகவே உள்ளனர். இன்று சாய்ந்தமருது மண் குப்பைகளால் துர்நாற்றம் அடிக்கிறது. அவற்றுக்காக இந்த மாநகர சபை உறுப்பினர் ஏதாவது செய்ய முயற்சித்துள்ளாரா?

அண்மையில் சாய்ந்தமருது வைத்தியசாலை வீதி பாலம் அருகே குப்பைகளின் கிடங்காக காட்சி தந்தது. மூக்கை பொத்திக்கொண்டு தான் இவர்களும் அந்த பாதையினால் சென்றார்கள். நாம் சக இளைஞர்களை ஒன்றுதிரட்டி களத்தில் இறங்கி- அவற்றை சுத்தம் செய்து சுற்றாடலைப் பாதுகாத்தோம். அதையும் சட்டப்படி பிழை என்று விமர்சித்தார்கள்.

அவர்களே முன்னின்று செய்ய வேண்டிய மாநகர சபை உறுப்பினர்கள் எமது செயற்பாட்டையும் தடுக்க முயற்சித்தார்கள். குப்பை பிரச்சினைக்காக நாம் மாநகர சபையை குறை கூறிக்கொண்டு பொலிசில் முறைப்பாடு செய்யவில்லை, நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவில்லை. அது அந்த உறுப்பினர்களின் இயலாமை என்று கருதிக் கொண்டு எம்மால் முடிந்ததை செய்து வருகின்றோம்.

ஆனால் அவர்கள் எதுவுமே மக்களுக்கு செய்யாமல் இருந்து கொண்டு மற்றவர்களை பிழை பிடிப்பதும் போலியான புகார்களை பொலிசாருக்கு கொடுத்து அவர்களை பிழையாக வழிநடத்துவதும் தனது குறைகளை மறைக்க மற்றவர்கள் செய்யும் வேலை திட்டங்களை தடுப்பதும் அவற்றுக்கு சேறு பூசி களங்கம் ஏற்றுப்படுத்த முனைவதும் மிகவும் பிற்போக்குத்தனமான செயற்பாடுகளாகும். அவை குறித்து எமது மக்கள் நன்கு அறிவார்கள்.

சாய்ந்தமருது பீச் பார்க் இருக்கும் அவலத்தை எல்லோரும் அறிவோம். அதனை முழுமைபடுத்தி மக்களிடம் கையளிக்க ஏதாவது முயற்சியை இந்த மாநகர சபை உறுப்பினர் மேற்கொண்டுள்ளாரா என்றால் எதுவும் இல்லை. மாதாந்தம் மக்கள் வரிப்பணத்தை சம்பளமாக பெருவதற்கா இவர்களுக்கு மக்கள் வாக்களித்தார்கள் என்று கேட்கிறோம்.

பதவியைப் பெற்றால் அவர்கள் போன்று எம்மையும் சும்மா வீட்டில் படுத்துக் கிடந்து உழைப்பதை உழைத்துக் கொண்டு காலம் கடத்த வேண்டும் என நினைக்கின்றனர். அது எம்மால் முடியாது. மக்கள் எம்மை நம்பி ஒப்படைத்த அமானிதத்தைப் பேணி- மறுமையில் இறைவனுக்கும் பதில் சொல்ல வேண்டும் என்கின்ற உளத்தூய்மையுடனேயே நாம் செயற்படுவோம்.

எது எவ்வாறாயினும் இத்தகைய சில்லறை அரசியல்வாதிகளின் போலியான புகார்களுக்கு நான் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. எந்த சட்ட நடவடிக்கைக்கும் முகம் கொடுக்க நாம் தயார். அத்துடன் என் மீது நம்பிக்கை வைத்து என்னை ஓர் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்த கல்முனைத் தொகுதி இளைஞர்களுக்கும் பொதுவாக எமது பிரதேச மக்களுக்கும் நான் ஆற்றுகின்ற பணிகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ எம் தில்சாத் குறிப்பிட்டுள்ளார்.