இலங்கையின் அரசியல் குடும்பம் ஒன்று டுபாய் நாட்டில் உள்ள வங்கி ஒன்றில் கணக்கொன்றை பேணி வருவது குறித்து அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
குறித்த அரசியல் குடும்பத்தை தவிர நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மற்றும் அரச நிறுவனம் ஒன்றின் தலைவரும் டுபாய் வங்கியில் கணக்கை வைத்துள்ளனர்.
இவர்கள் 300 ஆயிரம் கோடி அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணத்தை குறித்த வங்கியில் வைப்புச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரான அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, இந்த விடயம் குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச டுபாய் நாட்டில் உள்ள வங்கி ஒன்றில் பெருந்தொகை பணத்தை வைப்புச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.