ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் காவியுடை அணிந்து குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அனுப்பி வைக்கப்பட்டவர்களே அன்றி அவர்கள் பொதுபல சேனாவைச் சார்ந்தவர்கள் இல்லை என தேசிய பிக்குகள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
நேற்றைய தினம் பொதுபல சேனா அமைப்பின் பொது செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பாக தேசிய பிக்குகள் அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது. அதில்,
நேற்று ஹோமாகம நீதிமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலை நாட்டில் இரண்டு விதமாக சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர கடத்தலுடன் தொடா்பு கொண்டிருந்த போதிலும் ஞானசார தேரர் நீதிமன்றை அவமரியாதை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் சட்டம் இரண்டு விதமாக அமுல்படுத்தப்பட்டுள்ளது என தேசிய பிக்குகள் அமைப்பின் பாஹியன்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.
இரண்டு சம்பவங்களின் போதும் சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பினர் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பது மூலம் நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலையை புரிந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்தவர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அனுப்பப்பட்ட காவி உடை அணிந்தவர்களே. இவர்கள் பொது பல சேனாவைச் சேர்ந்தவர்கள் அல்லர் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் ஞானசார தேரர் மன்னிப்பு கோரியதாகவும் அதனால் அவருக்கு பிணை வழங்கியிருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனா, ராவனா பலய மற்றும் சிங்கள உறுமய போன்ற அமைப்புக்கள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.