ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீஸ் வாகனத்தின் மீது மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதலில் நடத்தினர். இந்த தாக்குதலில் 6 போலீசார் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலாமு மாவட்டத்தின் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள சட்டர்புர் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றது. இப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். கண்ணிவெடி தாக்குதலில் தகர்க்கப்பட்ட போலீஸ் வாகனத்தில் 12 பேர் இருந்தனர். வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மேலும் 6 போலீசார் காயமடைந்தனர்.
”இந்த தாக்குதலை தொடர்ந்து போலீசார் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது” என்று பலாமு மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பலாமு மாவட்ட டி.ஐ.ஜி சக்கெட் குமார் சிங் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
முன்னதாக இன்று காலை சத்தீஷ்கார் மாநிலத்தின் தண்டிவாடா மாவட்டத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 3 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.